வங்கக்கடலில் தீவிரப் புயலாக நிலை கொண்டுள்ள ‘அர்னாப்’ புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா நகரங்களுக்கு இயக்கப்படும் 2 புறப்பாடு மற்றும் 2 வருகை விமானங்கள் என மொத்தம் 4 விமான சேவைகள் இன்று மாலையில் இருந்து இரவு வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள அர்னாப், நாளை (அக்டோபர் 28) காலை ஆந்திர கடலோரப் பகுதியான பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் வேளையில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால், விமானப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று மாலை 4.00 மணிக்கு விசாகப்பட்டினம் புறப்பட்டுச் செல்ல வேண்டிய இண்டிகோ பயணிகள் விமானம் மற்றும் இரவு 7.05 மணிக்கு விஜயவாடா புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் ஆகிய 2 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு இன்று இரவு 8.00 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய இண்டிகோ விமானமும், விஜயவாடாவில் இருந்து இரவு 10.05 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய இண்டிகோ விமானமும் என மொத்தம் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: #BREAKING கண் திறந்த ‘அர்னாப்’ புயல்... நாளை கரையைக் கடக்கும் முன்பு காத்திருக்கும் கோரதாண்டவம்... எங்கு தெரியுமா?
அர்னாப் புயலின் தாக்கம் ஒடிசா மாநில கடலோரப் பகுதிகளிலும் எதிரொலிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள போதிலும், சென்னையில் இருந்து ஒடிசாவிற்கு இயக்கப்படும் விமான சேவைகளில் இதுவரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், நாளை காலை ஆந்திராவிற்கு இயக்கப்பட வேண்டிய வழக்கமான விமான சேவைகள் குறித்து, இன்று நள்ளிரவு புயலின் வேகம் மற்றும் வானிலை நிலவரத்தை ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திக்...! திக்...!! நெருங்கும் ஆபத்து... அதிதீவிரப் புயலானது ‘அர்னாப்’... எங்கெல்லாம் ரெட் அலர்ட்.?