தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் ராஜ்யசபா எம்.பி. சிவாவின் மகள் காயத்ரி, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராகவும், நீண்ட காலமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும் செயல்பட்டு வரும் ராஜ்யசபா எம்.பி. சிவாவுக்கு சூரியா என்ற மகனும், காயத்ரி மற்றும் டாக்டர் பத்மபிரியா என்ற இரு மகள்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், சிவாவின் மகள் காயத்ரி கடந்த 2024-ம் ஆண்டிலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைந்து, கட்சியின் அடையாள அட்டையையும் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுவரை அவர் பொதுவெளியில் கட்சி நிகழ்ச்சிகளில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை.
இதையும் படிங்க: எடப்பாடி தலையில் இறங்கிய பேரிடி..! கட்சியிலிருந்து விலகிய வைகைச் செல்வன்..! அதல பாதாளத்தில் அதிமுக..!!

தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் முறைப்படி கட்சியில் இணைய நேரம் கேட்டுள்ளதாகவும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகியதையடுத்து, த.வெ.க.வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
மேலும், காயத்ரியின் கணவர் வழக்கறிஞர் முத்துக்குமார் தற்போது தி.மு.க.வில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஒரே குடும்பத்தில் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அதே நேரத்தில், காயத்ரியின் இந்த அரசியல் முடிவு தனிப்பட்டதா அல்லது எதிர்கால அரசியல் பயணத்தின் தொடக்கமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதுகுறித்து தி.மு.க. அல்லது தமிழக வெற்றிக் கழக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவலாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரம் தமிழக அரசியலில் புதிய கவனத்தை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மாறுவேடத்தில் களமிறங்கிய பாஜக... மறுக்காமல் வழிவிட்ட விஜய்... ஆளுநர் ஆய்விற்குள் மறைந்திருக்கும் திடுக்கிடும் உண்மை...!