கடந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய்யின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், "வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்போது ஆடிட்டர் செய்த சிறிய பிழைகளுக்காக மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த முதலமைச்சரின் வெற்றியை எப்படிச் செல்லாது என அறிவிக்க முடியும்?" என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் தனது பிரமாணப் பத்திரத்தில் முழுமையான சொத்து விவரங்களைத் தெரிவிக்காமல் உண்மைகளை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்ததாகவும், எனவே அவரது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அத்தொகுதி வாக்காளர் எஸ். தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் ஆகியோர் சார்பில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ஆரம்பக் கட்டத்திலேயே முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் (Reject Election Petitions) எனக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முழுமையான வெளிப்படைத்தன்மை: "முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமாகச் சுமார் ரூ.600 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன என்பது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பெரிய முதலீட்டையோ அல்லது வருமானத்தையோ விஜய் மறைக்கவில்லை."
ஆடிட்டரின் எழுத்துப் பிழை: "திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனக்கு அன்பளிப்பாக வழங்கிய (Gift) ஒரு குறிப்பிட்ட வீட்டை, ஆவணங்களைத் தயாரித்த ஆடிட்டர் பரம்பரைச் சொத்து (Inheritance) என்ற பகுதியில் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடு தனக்குச் சொந்தமானது என்பதும், அதன் விவரங்களும் பிரமாணப் பத்திரத்தில் வெளிப்படையாகவே உள்ளது. அவ்வாறு இருக்கும்போது இதனை வேண்டுமென்றே சொத்தை மறைத்துவிட்டதாக மனுதாரர் திரித்துக் கூறுவது முற்றிலும் தவறானது."

இதையும் படிங்க: அரசியலில் தனுஷ்: 'தமிழக எழுச்சிக் கழகம்' பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு?
தேர்தல் செல்லாது எனக் கோர முடியாது: "தேர்தல் விதிகளின்படி சிறிய குறைபாடுகள் அல்லது எழுத்துப் பிழைகள் (Minor clerical errors) வேட்புமனுவை முறையற்ற முறையில் ஏற்றுக்கொண்டதாகவோ அல்லது வெற்றியைப் பறிக்கும் அளவுக்கான சட்டவிரோதமாகவோ கருதப்பட முடியாது என உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு அரசியல் சாசனத் தீர்ப்புகள் மற்றும் சட்ட ஆணையப் பரிந்துரைகள் தெளிவாகக் கூறியுள்ளன."
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், ஆவணங்களைத் தயாரிக்கும்போது ஆடிட்டர் செய்த ஒரு தொழில்நுட்பக் குறைபாட்டிற்காக, ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த ஒரு மக்கள் பிரதிநிதியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரிய இந்த மனு மீதான அடுத்தகட்ட வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு எதிரான இந்த வழக்கின் விசாரணை அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக-ன்னா அவ்ளோ பயமா சார்?: தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்!