இந்தியாவின் பாரம்பரியமிக்க 92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று லீக் ஆட்டங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தமிழ்நாடு அணி, உத்தரகாண்ட் அணியை எதிர்கொள்கிறது; சொந்த மண்ணில் நடைபெறும் இப்போட்டியில் அபார வெற்றியைப் பதிவு செய்து நடப்பு சீசனின் முதல் வெற்றிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் தமிழக வீரர்கள் களம் காண்கின்றனர்.
நடப்பு 92-வது ரஞ்சி கோப்பை தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இவை 'எலைட்' மற்றும் 'பிளேட்' என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பிளேட் பிரிவில் 6 அணிகளும், எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 குழுக்களாகத் (குரூப் ஏ, பி, சி, டி) தலா 8 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் டாப்-2 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெறும்.
முன்னாள் சாம்பியனான தமிழ்நாடு அணி 'டி' பிரிவில் இடம்பிடித்துள்ளது. 42 முறை சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த மும்பை, அரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், ரயில்வேஸ், இமாசல பிரதேசம் மற்றும் சண்டிகார் ஆகியவை இந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
இதையும் படிங்க: மழைநீரை உடனே அகற்றுங்கள்: 15 மண்டல பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு!
தொடரின் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறத் தவறியதால் அந்தப் போட்டியை டிரா செய்து வெறும் 1 புள்ளியை மட்டுமே பெற்றது. இதே பிரிவில் மும்பை (7 புள்ளிகள்), அரியானா (6 புள்ளிகள்) முதல் வெற்றிகளைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கின்றன. முதல் ஆட்டத்தை டிரா செய்த உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 3 புள்ளிகளையும், ரயில்வேஸ் 1 புள்ளியையும் பெற்றுள்ளன. தோல்வியடைந்த இமாசல பிரதேசம் மற்றும் சண்டிகார் அணிகள் இன்னும் கணக்கைத் தொடங்கவில்லை.

இத்தகைய சூழலில், இன்று காலை 9.30 மணிக்குச் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில், முதல் போட்டியில் விட்ட புள்ளிகளை ஈடுகட்டத் தமிழ்நாடு அணி முழு பலத்துடன் வரிந்துகட்டுகிறது. அணியில் கேப்டன் ஆர். சாய் கிஷோர், முன்னணி பேட்டர்களான என். ஜெகதீசன், சாய் சுதர்சன், இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், பிரதோஷ் ரஞ்சன் பால், சோனு யாதவ் என அனுபவமும் இளமையும் கலந்த அசுர பலம் வாய்ந்த வீரர்கள் அணிவகுக்கின்றனர். மறுபுறம், தனது முதல் ஆட்டத்தில் ரயில்வேஸ் அணியுடன் டிரா செய்து 3 புள்ளிகளுடன் உற்சாகமாக இருக்கும் குணால் சந்தேலா தலைமையிலான உத்தரகாண்ட் அணி, தமிழகத்திற்குத் தனது கடுமையான சவாலை அளிக்கக் காத்திருக்கிறது.
இதனிடையே, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தமிழ்நாடு அணியின் இரு ரஞ்சி கோப்பை போட்டிகளையும் (அக்டோபர் 18-21 உத்தரகாண்ட் போட்டி மற்றும் அக்டோபர் 26-29 ரயில்வேஸ் போட்டி) கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் வந்து எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகக் கண்டு ரசிக்கலாம் எனத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: சென்னையில் கனமழை பாதிப்பு குறித்து ஆதவ் அர்ஜுனா ஆய்வு!