சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக விடிய விடிய பெய்த அதிதீவிர கனமழையால் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீருக்கு உடனடியாகத் தீர்வு காணவும், வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மின்னல் வேகத்தில் முடுக்கிவிடவும் அமைச்சரவை சகாக்களுக்குத் தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை நேரில் நின்று ஒருங்கிணைக்கும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் அனைவரும் உடனடியாகக் களத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னையில் குறுகிய கால இடைவெளியில் வரலாறு காணாத அளவுக்குக் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் நகரின் பல்வேறு தாழ்வான குடியிருப்புப் பகுதிகள், சுரங்கப்பாதைகள் மற்றும் முக்கியச் சாலைகளில் பெருமளவில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: சென்னையில் கனமழை பாதிப்பு குறித்து ஆதவ் அர்ஜுனா ஆய்வு!
நிலைமையின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய், பின்வரும் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்:
பொறுப்பு அமைச்சர்கள் கள ஆய்வு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் நிவாரணம், சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் எவ்விதத் தாமதமுமின்றி அந்தந்த மண்டலப் பகுதிகளுக்கு நேரில் சென்று பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

மழைநீரை அகற்ற உடனடித் தீர்வு: சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை ராட்சத மின்மோட்டார்கள் மற்றும் பம்புகள் மூலம் போர்க்கால அடிப்படையில் துரிதமாக வெளியேற்றி மக்களுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்.
அடிப்படை வசதிகள் & நிவாரணம்: நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தரமான உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பால், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்குதடையின்றி கிடைப்பதை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக உறுதி செய்ய வேண்டும்.
உயர் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு: 15 மண்டலங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்களுடன் பொறுப்பு அமைச்சர்கள் களத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டுப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு எந்தவிதச் சிரமமும் ஏற்படாத வண்ணம் அரசு இயந்திரம் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்றும், கள நிலவரங்கள் குறித்துத் தனக்கு உடனுக்குடன் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். முதல்வரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் சென்னை மாநகரின் பல்வேறு மண்டலங்களுக்கு நேரில் சென்று மழைநீர் அகற்றும் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் முழுவீச்சில் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே இரவில் 30 செ.மீ மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை - வேளச்சேரியில் இறங்கியது NDRF!