தமிழ்நாடு அரசு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை முதன்மையாகக் கருதி, “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” இன்று முதல் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் நேரடியாக வினியோகிக்கப்படுகின்றன. இதனால், நியாய விலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.

இத்திட்டம் முதற்கட்டமாக, 34,809 நியாயவிலைக் கடைகள் மூலம் 15.81 லட்சம் குடும்ப அட்டைகளில் உள்ள 20.42 லட்சம் முதியவர்கள் மற்றும் 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21.70 லட்சம் பயனாளிகளுக்கு சேவையாற்றுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு மற்றும் ePoS இயந்திரங்களுடன் கூடிய மூடிய வாகனங்களில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் இந்தப் பொருட்களை வழங்குவர்.
இதையும் படிங்க: விஜயகாந்த் இருந்தப்பவே முதுகுல குத்துனாங்க! பிரேமலதா ஆதங்கம்..!
சென்னை தண்டையார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மேலும் இது திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலன் சார்ந்த மற்றொரு மைல்கல் என குறிப்பிட்ட அவர், கொருக்குப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்" தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) நிறுவனர் விஜயகாந்தின் கனவுத் திட்டமாகும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமிதத்துடன் தெரிவித்தார். இத்திட்டம் விஜயகாந்தின் முதல் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், இதன் மூலம் அவருக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதாகவும் பிரேமலதா குறிப்பிட்டார். இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "இது கேப்டனின் கனவு. அவர் மக்களுக்காக வாழ்ந்தவர்; அவரது புரட்சிகரமான யோசனைகளில் ஒன்று இத்திட்டம். இதை நிறைவேற்றியதற்கு தமிழக அரசுக்கு நன்றி," என்றார். மேலும், 2026ஆம் ஆண்டு மக்களாட்சி மலரும் ஆண்டாக அமைய வேண்டும் எனவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

தாயுமானவர் திட்டம், வறுமை ஒழிப்பில் தமிழகத்தின் முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் வெளியிடப்பட்டு, தற்போது மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
விஜயகாந்தின் மக்கள் நலன் சார்ந்த பார்வையை பிரதிபலிக்கும் இத்திட்டம், தமிழகத்தில் சமூக நீதியை மேம்படுத்துவதற்கு ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பிரேமலதாவின் பேச்சு, தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதையும் படிங்க: விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!