மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ராம ரவிகுமார் தொடர்ந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் நீண்ட நாட்களாக விசாரணையில் உள்ளது. தனி நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் அறநிலையத்துறை அதை செயல்படுத்த மறுத்தது. இதனால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
தனி நீதிபதி மனுதாரருடன் 10 பேர் சென்று தீபம் ஏற்ற அனுமதி அளித்து, பாதுகாப்புக்கு சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களை அனுப்ப உத்தரவிட்டார். இதனால் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு நிலவியது. தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இது கார்த்திகை தீபத்தூண் அல்ல. சமணர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தூண். சமண முனிவர்கள் இரவில் விளக்கு ஏற்றி வெளிச்சத்தில் விவாதம் நடத்த பயன்படுத்தினர். மதுரை மாவட்டத்தில் இதுபோன்ற தூண்கள் இன்னும் சில மலைகளில் உள்ளன” என்று வாதிட்டார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்... பாஜக எம். பி. பேச்சால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை..!
தர்கா தரப்பில், தனி நீதிபதி போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்றும், தர்கா நிர்வாகம் கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிட்டது ஏற்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.

கோயில் தரப்பு வாதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அரசு தரப்பில் இது 'சர்வே கல்' என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது சமணர் கால தூண் என்று கூறியுள்ளது அரசு தரப்பிலேயே முன்பின் முரண்பாடாக உள்ளது. இது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
வழக்கு விசாரணை தொடர்கிறது. இந்தப் பிரச்சினை வரலாறு, மதம், சட்டம் ஆகியவற்றைத் தொட்டு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனை பதவியை விட்டு தூக்குங்கள்... தீர்மான நோட்டீசை வழங்கிய இந்தியா கூட்டணி எம்பிகள்...!