சென்னை மெரினா கடற்கரை, உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் 13 கி.மீ. நீளத்தில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கடற்கரை, இயற்கை அழகையும், சென்னையின் கலாசார பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
காலை நேரத்தில் சூரிய உதயத்தின் கண்கவர் காட்சியையும், மாலையில் கடலின் அமைதியான அலைகளையும் காண ஏராளமான மக்கள் இங்கு கூடுகின்றனர். மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடம், விவேகானந்தர் இல்லம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அமைந்துள்ளன. இவை சென்னையின் அரசியல் மற்றும் கலாசார முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.

மேலும், கடற்கரையோரம் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் பார்வையாளர்களுக்கு கூடுதல் ஈர்ப்பை அளிக்கிறது. மெரினாவில் மாலை நேரங்களில் கூடும் மக்கள் கூட்டம், உள்ளூர் உணவு வகைகளான முறுக்கு, சுண்டல், மீன் வறுவல் போன்றவற்றை ருசிக்கும் காட்சி இயல்பான ஒரு அனுபவமாக உள்ளது.
இதையும் படிங்க: மக்களே.. இனி பார்க்கிங்கிற்கு 'NO CHARGE'.. சென்னை மாநகராட்சி சொன்ன குட் நியூஸ்..!
குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள், குதிரை சவாரி, கடற்கரை விளையாட்டுகள் என பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளன. எனினும், கடற்கரையில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுக்க அரசு மற்றும் தன்னார்வலர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையின் அடையாளமாக விளங்கும் மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க, சென்னை மாநகராட்சி 100 தூய்மை பணியாளர்களை நியமித்துள்ளது. இந்த முயற்சி, உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவை சுத்தமாகவும், பார்வையாளர்களுக்கு ஏற்ற இடமாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 2.4 கி.மீ மணல் பரப்பை தூய்மைப்படுத்த இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் காலை 6 மணி முதல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடவுள்ளனர். காலை 70 பணியாளர்களும், மாலை 30 பணியாளர்களும் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். மேலும் கடற்கரை மணல் பரப்பை தூய்மை படுத்தும் டிராக்டர்களும் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபடும்.

மெரினா கடற்கரை, தினசரி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கிய சுற்றுலாத் தலமாகும். இங்கு நடைபெறும் பொங்கல், காணும் பொங்கல், விமான சாகச நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளால் குப்பைகள் அதிகரிக்கின்றன. இதனை கட்டுப்படுத்த, மாநகராட்சி இந்த புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.
மேலும், "நீல கொடி" திட்டத்தின் கீழ், 33 சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில், மெரினாவை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க மாநகராட்சி ஆணையர் உறுதியளித்துள்ளார். பொதுமக்களும் இந்த முயற்சியில் பங்கேற்க வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடற்கரையில் குப்பைகளை வீசுவதை தவிர்ப்பது, மறுசுழற்சி முறைகளை பின்பற்றுவது உள்ளிட்டவை மூலம், சென்னைவாசிகள் மெரினாவை தூய்மையாக பராமரிக்க உதவ வேண்டும். இந்த தூய்மை பணியாளர்களின் முயற்சியும், பொதுமக்களின் ஒத்துழைப்பும் இணைந்து, மெரினா கடற்கரை மேலும் அழகாகவும், பாதுகாப்பாகவும் ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெரினா கடற்கரை தூய்மை பணியை சென்னை மாநகராட்சி தனியாருக்கு ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தில் சேதமான தடுப்புகள்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. தவெக எடுத்த அதிரடி முடிவு..!