பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த செவிலியர் சங்கங்களுடன், முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், நிலுவையிலுள்ள பதவி உயர்வுகள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, முதற்கட்டமாகச் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் விரைவில் நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அறிவித்தார். மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கும் படிப்படியாகப் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் (2015-2020) 1,871 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் 1,693 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த செவிலியர்களின் நலன் கருதி, ஒன்றிய அரசின் மகப்பேறு சட்டம், 1961-இன் படி ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களில் விடுபட்ட 724 செவிலியர்களுக்கும் விரைவில் பணி நியமனம் வழங்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஒப்பந்த செவிலியர்களின் மாத ஊதியத்தை 14,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக ஏற்கனவே உயர்த்தியுள்ள அரசு, சில நிர்வாக காரணங்களால் இந்த உயர்வைப் பெறாதவர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த மக்கள் நல முடிவுகளை ஏற்றுச் செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசுடன் மல்லுக்கட்டும் ஜாக்டோ - ஜியோ! ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு!
இதையும் படிங்க: #BREAKING: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு; 10,583 பேர் தேர்ச்சி!