தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) இன்று நடத்திய சோதனையில் சுமார் ரூ.16 லட்சம் மதிப்பிலான 31 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படை முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையாளர் திரு. கே. அருள்ஜோதி மற்றும் சென்னை கோட்ட ஆணையாளர் திரு. வல்லேஸ்வர பாபுஜி தெக்களா ஆகியோரின் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் திரு. கே.பி. ஜெபாஸ்டியன் தலைமையிலான குழுவினர் எக்மோர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதல் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலிருந்து சென்னை வழியாகப் பாண்டிச்சேரி நோக்கி வந்த விரைவு ரயிலில் (வண்டி எண்: 20851) காலை 07:50 மணியளவில் சோதனையிட்டனர்.

ரயிலின் மூன்றடுக்கு ஏசி பெட்டியான B5 கோச்சில் உரிமை கோரப்படாத நிலையில் கிடந்த 02 ட்ராலி பைகள் மற்றும் 01 தோள்பட்டை பை ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்தப் பைகளைத் திறந்து பார்த்தபோது, செல்லோ டேப்பினால் சுற்றப்பட்ட 31 பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை ஆய்வு செய்ததில், மொத்தம் 31 கிலோ உலர்ந்த கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு சுமார் ரூ.16 லட்சம் ஆகும்.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் நியமனம்! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள், NDPS சட்டத்தின் கீழ் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு (Narcotics Intelligence Bureau) ஆய்வாளர் திரு. ராமரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கஞ்சாவைப் புவனேஸ்வரிலிருந்து கடத்தி வந்து, எக்மோர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது பிடிபடுவோம் என்ற அச்சத்தில் யாரேனும் விட்டுச் சென்றார்களா அல்லது கடத்தல்காரர்கள் எக்மோரில் இறங்கித் தப்பிச் சென்றார்களா என்பது குறித்து ஆர்.பி.எஃப் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோதப் பொருட்கள், கணக்கில் வராத பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எக்மோர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் ஸ்கேனர் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரச் சோதனைகள் தொடர்கின்றன.
இதையும் படிங்க: சுத்தம் இல்லை.. ஊழல்! மதுரையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சாடிய அதிமுக வேட்பாளர் சுந்தர். சி!