காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கல்பனா தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டிற்குப் பணி தொடர்பாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி வீட்டிலிருந்து புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு சிறுமி வீடு திரும்பாததால், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும், சிறுமி கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: 6,000 பணியிடங்கள் காலி! கல்வித்துறையில் சர்ச்சை! உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் புதிய சிக்கல்!
இதையடுத்து, சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நேற்று ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் தாத்தா, பாட்டி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, சிறுமி எந்தெந்தப் பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் என்பதைக் கண்டறிய, அவரது வீட்டிலிருந்து அவர் சென்றிருக்கக்கூடிய வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து சிறுமி பேருந்தில் சென்றிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், அந்தப் பேருந்து எந்த வழித்தடத்தில் சென்றது, வழியில் உள்ள பேருந்து நிலையங்களில் சிறுமி எங்காவது இறங்கியுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமியைத் தேடும் பணியில் மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே செஞ்சியில் சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாதக வேட்பாளர் கார்த்திகா கைது! அதிகாரம் நிரந்தரமல்ல! முதல்வர் விஜய்க்கு சீமான் கடும் எச்சரிக்கை!