தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது எதிர்பாராத நகைச்சுவைக் காட்சி ஒன்று இடம்பெற்றது. விக்கிரவாண்டி தொகுதி பாமக உறுப்பினர் சிவகுமார் பேசியபோது, நீர்வளத் துறை தொடர்பான நீண்டகால கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பதில் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கடந்த 5ஆம் தேதி பொது பட்ஜெட்டும் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுமுறைக்குப் பிறகு சட்டசபை மீண்டும் கூடியது. நேற்று சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட துறைகள் குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில், இன்று பொதுப்பணி, விளையாட்டு, இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன.
விக்கிரவாண்டி எம்எல்ஏ சிவகுமார் பேசுகையில், 1952ஆம் ஆண்டு அப்போதைய எம்எல்ஏ கோவிந்தசாமி முன்வைத்த நந்தன் கால்வாய் திட்டம் இன்னும் நிறைவேறவில்லை என்று குறிப்பிட்டார். 65 முதல் 70 ஆண்டுகளாகப் பல்வேறு கட்சிகள் பேசி வந்தாலும் செயல்படுத்தப்படாத இந்தத் திட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளையும் விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளையும் பாசனத்திற்குப் பயன்படுத்த உதவும் என்றார்.
இதையும் படிங்க: சொந்தக் கட்சிக்காரரே ஆனாலும் விதி ஒன்றுதான்.. ஆதவ் பேச்சை நீக்கி அதிரடி காட்டிய ஜே.சி.டி.பிரபாகர்!
2024ஆம் ஆண்டு ஃபெங்கால் புயலால் பாதிக்கப்பட்ட ஏரிகளைச் சீர்செய்ய வேண்டும் என்று அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிரித்தபடியே எழுந்து பேசத் தொடங்கினார். “நீர்வளத் துறை மானியக் கோரிக்கை நாளைதான். ஆனந்த் அண்ணனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வு குறித்து ஏற்கனவே பலர் பேசியிருக்கிறார்கள். பொதுப்பணித் துறை அல்லது இளைஞர் நலன் தொடர்பாக ஏதாவது சொன்னால் எனக்கு விளக்க உரைக்கு உதவும். அண்ணனை நாளைக்குக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று அமைச்சர் கூறியதும் அவையில் சிரிப்பு வெடித்தது.

தொடர்ந்து அவர், “அன்புமணி அண்ணனுக்கு மூன்று வயதாக இருக்கும்போதே நந்தன் கால்வாய் பேச்சு எழுந்ததாம். இன்று அவருக்கு 57 வயதாகிறது. நாளை நீர்வளத் துறை விவாதம் என்றாலும் இன்றே சொல்லி வைத்துவிடலாம்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். பின்னர் சிவகுமார், விக்கிரவாண்டியைத் தனி கோட்டாட்சியாகப் பிரித்து வானூர் தொகுதியையும் இணைத்து தனி கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும், துணை காவல் கண்காணிப்பாளர் கட்டடம், அனைத்து மகளிர் காவல் நிலையம், சிங்கப்பெண் காவல் நிலையம், போக்குவரத்து கட்டடம், பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்துதல், தீயணைப்பு நிலையம் ஆகிய கோரிக்கைகளை வைத்தார்.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, “நந்தன் கால்வாய் திட்டத்திற்கு முந்தைய ஆட்சியிலேயே நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. உறுப்பினர் அப்போது மயிலம் தொகுதி எம்எல்ஏவாக இருந்ததால் தெரியாது” என்றார். உடனே சி.வி. சண்முகம் எழுந்து, “எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை; திட்டம் கிடப்பில் உள்ளது” என்று மறுத்தார். இதனால் அவையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: விஜய் வசதிக்காக அலுவலகம் மாற்றமா? அமைச்சர் ஆதவ் சொன்ன முக்கிய காரணம்..!!