தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.
முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர். இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: தொகுதி மறுவரைக்கு எதிரான இந்த தீர்மானத்தின் மீது பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்த எங்களுடைய முதலமைச்சர் அவர்களுக்கும், பேரவைத் தலைவர் அவர்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம். ஏன் இந்தத் தீர்மானம்? எங்களுடைய முதலமைச்சர், தமிழ்நாட்டுடைய முதலமைச்சர், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இந்த அவையில் கொண்டு வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: கொதிக்கும் டெல்லி..! மத்திய அரசின் கைது அப்பட்டமான தாக்குதல்... ஆதவ் அர்ஜுனா கண்டனம்.!
இந்தத் தீர்மானத்தின் அடிப்படை என்னவென்றால், மாநிலங்கள் இல்லாமல் ஒன்றிய அரசு இல்லை. பேரறிஞர் அண்ணா வலியுறுத்தியதைப் போல, நாடாளுமன்றத்தில் முழங்கியதைப் போல, மாநில சுயாட்சி இல்லாமல் ஒரு இந்தியாவை உருவாக்க முடியாது. மாநிலங்களைத் தவிர்த்து இந்திய நாட்டினுடைய வளர்ச்சியை உருவாக்க முடியாது.
அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியாக இருந்தபொழுது ஒரு யுத்தத்தை எதிர்கொண்டார். அந்த யுத்தம் வடக்கு, தெற்கு என்கின்ற யுத்தம். அதேபோல்தான் இன்று வடக்கு, தெற்கு என்கின்ற யுத்தத்தை இந்தியாவும் சரி, நாமும் சரி எதிர்நோக்கி இருக்கிறோம்.
புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சமத்துவத்தை வலியுறுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 அனைவரும் சமம் என்று கூறுகிறது. எல்லோருக்குமான அரசியல் அதிகாரம் உருவாக்கப்பட வேண்டும். அதில் மாநிலத்தினுடைய பிரதிநிதித்துவம் மிக முக்கியமானது.
நம்முடைய பாஜக சகோதரர் கேட்டார், “ஏன் இந்த அவசரம்?” என்று. நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாதபொழுதே, தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு ஏற்படும் பொழுது, தந்தை பெரியாரும் அண்ணாவும் இணைந்து அரசியலமைப்பில் முதல் திருத்தத்தைக் கொண்டுவந்தது தமிழ்நாடு. இதுதான் தமிழ்நாட்டினுடைய வரலாறு.
அதே வழியில், எங்களுடைய முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டிற்காகக் கொண்டு வந்திருக்கிறார். ஆளுகின்ற அரசுகள் வரக்கூடிய தேர்தலுக்காக இந்தச் சட்டங்களைக் கொண்டு வரலாம் என்ற ஒரு சிந்தனை உருவாக்கலாம். ஆனால் இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு.
அரசியல் கட்சிகள் மாறலாம். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு எப்பொழுதும் நிரந்தரமானது. அந்த அரசியலமைப்பைப் பாதுகாக்கவே இந்தத் தீர்மானம்.
இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நன்றி சொல்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு அரசியல் ரீதியாக நாம் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அண்ணா உருவாக்கிய கொள்கை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும் உருவாக்கப்பட்டதல்ல; தமிழ்நாட்டிற்காகவும் இந்தியாவிற்காகவும் உருவாக்கப்பட்ட கொள்கை.
அந்தக் கொள்கையின் வழியில் வந்தவர்கள் நாங்கள். எங்களுடைய முதலமைச்சரும் அந்தக் கொள்கையின் வழியில் வந்தவர். தமிழக வெற்றிக் கழகம் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
கலைஞர் அவர்களும் மாநில சுயாட்சிக்காக இதே அவையில், இதே தமிழ்நாட்டில், அரசியல் கருத்துக்கள் வேறுபாடுகள் இருந்தாலும், உயிருள்ளவரை, உயிர்மூச்சு உள்ளவரை மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்தவர்கள்.
இந்தத் தீர்மானத்தில் மிக முக்கியமான பிரச்சினை மாநில சுயாட்சியை நாம் இழப்போம் என்பதுதான். அண்ணா அன்றைக்கே முழங்கினார்: “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்று. இன்றைக்கும்கூட அந்தப் பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கிறது.
நாம் நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40, புதுச்சேரி உட்பட வெற்றி பெறுவோம். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டுக்கு எதிரான அனைத்து சட்டங்களுக்கும் எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அது நீட் ஆக இருக்கட்டும், ஜிஎஸ்டி ஆக இருக்கட்டும், சிஏஏ ஆக இருக்கட்டும். ஆனால் கடந்த 10 வருடங்களாக நமக்கான சட்டங்கள் நமக்கு எதிராகத்தான் இருந்துகொண்டிருக்கின்றன.
கடைசி வாய்ப்பாக 543 என்று நமக்கான ஒரு எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடைசியாக 2001-ல் உறுதி செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடும்பொழுது, நமக்கான குரலும், நமக்கான உரிமையும் பறிக்கப்படும்.
வரலாற்றைப் பற்றிப் பேசலாம் என்று நினைத்த நம்முடைய மாண்புமிகு சகோதரர் வன்னியரசு அவர்கள் எல்லாவற்றையும் பேசிவிட்டார்.
பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அம்மையார் அவர்கள், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தக்கூடிய திட்டங்களை கொண்டு வந்தபொழுது, தென் மாநிலங்கள் அதை வளர்ச்சிக்காக அமல்படுத்தின. மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் நிர்ணயிக்கப்பட்டால், நாளைக்கு இந்தியா சமத்துவத்தை இழந்துவிடும் என்று சட்டத்தைக் கொண்டு வந்தார்.
அதன் வழியில் திரு. வாஜ்பாய் அவர்கள் 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படியும் சட்டத்தை நிறைவேற்றி, 25 ஆண்டுகளுக்கு 543 என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், தமிழ்நாட்டில் 39 என்ற பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தினார்கள்.
ஆனால் இன்றைக்கு அரசியல் கருத்துக்கள் நமக்குள் இருந்தாலும், எனக்கு முன்பு பேசிய சட்டமன்ற உறுப்பினர்களுடைய உரையிலிருந்து என்னுடைய விளக்கத்தை நான் தொடர்கிறேன்.
எனக்கு முன்பு பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாற்றை முன்னதாகவே சொல்லிவிட்டார்கள். அதில் முதலில் பாஜகவுடைய எம்.எல்.ஏ. அவர்கள், “ஏன் இந்த அவசரம்?” என்று கேட்டார். உள்ளாட்சி நிர்வாகத்தில், சட்டமன்றத்தில் நிர்வாக ரீதியாக மாற்றப்படும் பொழுது, ஏன் நாடாளுமன்றத்தில் மாற்றப்பட வேண்டும் என்று கேட்டார்.
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு ஜனநாயகங்கள்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகங்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வார்கள். ஒன்று அமெரிக்க ஜனநாயகம்; மற்றொன்று இந்திய ஜனநாயகம்.
அமெரிக்க ஜனநாயகத்தைக் கட்டிக்காத்த திரு. ஆபிரகாம் லிங்கன் அவர்களுடைய பார்வையிலும் சரி, அமெரிக்காவின் வளர்ச்சியிலும் சரி, இன்று உலகத்தின் பொருளாதாரத்தில் நம்பர் ஒன் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய விகிதாச்சாரத்தை உருவாக்கவில்லை.
20 கோடியிலிருந்து 50 கோடி, 60 கோடியாக மக்கள் தொகை அதிகரித்தாலும், இன்றைக்கு வரைக்கும் அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பணி வேறு; சட்டமன்ற உறுப்பினர்களுடைய பணி வேறு; உள்ளாட்சி பிரதிநிதிகளுடைய பணி வேறு.
தேமுதிகாவைச் சேர்ந்த சகோதரி அவர்களும் இதைக் குறிப்பிட்டார்கள். “50 சதவீதம் அதிகரிக்கும்பொழுது நமக்குப் பலன் தானே?” என்று. அப்படி கிடையாது.
ஐந்து, ஆறு வட மாநிலங்கள் சேர்ந்தால் ஒரு பிரதமரை உருவாக்க முடியும் என்ற நிலை இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும்.
தென்னிந்தியாவிலிருந்து, ஏன் தமிழ்நாட்டிலிருந்து, ஒரு பிரதமர் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும். அதிகாரம் உத்தரப் பிரதேசத்திற்கோ, பீகாருக்கோ, குஜராத்திற்கோ மட்டுமல்ல.
நம்முடைய குரல் சட்டமன்றத்தில் ஒலித்தது போல, ஒரு நாள் நாடாளுமன்றத்தில் ஒரு பிரதமராக ஒலிக்க வேண்டும். இதற்குத்தான் இந்தத் தீர்மானம் என்றார்.
இதையும் படிங்க: கையில் பேப்பருடன் களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்... சி.எம். விஜய்க்கு கொடுத்த பெரும் ஷாக்...!