கன்னியாகுமரி மாவட்டத்தில், தாழக்குடி அருகே அமைந்துள்ள அவ்வையார் அம்மன் கோவில் பக்தர்களின் மனதில் ஆழமான பக்தியையும், ஆன்மிக அமைதியையும் விதைக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில், தமிழகத்தின் புகழ்பெற்ற கவயித்ரியும், ஆன்மிக அறிஞருமான அவ்வையாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தியாவின் தென்கோடியில், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், நாகர்கோவிலுக்கு அருகில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

அவ்வையார் அம்மன் கோவில், குறிப்பாக ஆடி மாதத்தில் பெண்களால் அதிகம் வணங்கப்படுகிறது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள், குறிப்பாக பெண்கள், கூழ், கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் போன்ற பிரசாதங்களைத் தயாரித்து அம்மனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இந்தக் கோவிலில் வேண்டிக்கொண்டால் குழந்தை வரம், திருமண வரம் மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: கும்பாபிஷேகம் முடிஞ்சாச்சு.. இனி செந்தில்நாதனை தரிசிக்கலாம்.. போலாம் ரைட்..!
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் நடைபெறும் விசேஷ பூஜைகள் பக்தர்களின் கூட்டத்தை ஈர்க்கின்றன. கோவிலின் அமைதியான சூழல் மற்றும் ஆன்மிக சக்தி, பக்தர்களுக்கு மன அமைதியை அளிக்கிறது. தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவிலுக்கு செல்ல நாகர்கோவிலில் இருந்து இறச்சகுளம் மற்றும் செண்பகராமன் புதூர் வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக பலத்த காவல் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் செவ்வாய்க் கிழமையையொட்டி இன்று காலையிலிருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பெண்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்திலும், அருகில் உள்ள தோப்புகளிலும் முகாமிட்டு, தாங்கள் கொண்டு வந்த பொருள்களை கொண்டு கூழ், கொழுக்கட்டை மற்றும் சர்க்கரை பொங்கல் தயார் செய்து அவ்வையார் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு அம்மனுக்கு மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். இதே போல முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலிலும் ஆடி செவ்வாயையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் இசக்கியம்மனுக்கு அபிஷேகமும் மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: கோயிலில் பெண்ணிடம் அத்துமீறல்... அரை நிர்வாணமாக ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் வீடியோ லீக்...!