திருவள்ளூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (65).
இவர் தனது மனைவி கீதா (57). அவருடைய மகன் கார்த்தியின் மகள்கள் ஹன்சினி, ஹரிணி என நான்கு பேரும் வீட்டிலிருந்து காரில் திருவள்ளூர் நோக்கி கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது செவ்வாப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஆவடி -திருவள்ளூர் செல்லும் அரசு பேருந்து மீது நேர் எதிராக கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே கார் இயக்கிய ரவிச்சந்திரன் பலியான நிலையில் அவர் மனைவி கீதா படுகாயமடைந்தார்.

பேத்திகள் இருவர் சிறிய காயங்களுடன் காரில் இருந்து பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் கீதா வரும் வழியிலே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பேத்திகள் இருவர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவிச்சந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கார் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது மோதி விபத்து நடந்ததா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் அருகே அரசு பேருந்து மீது எதிரே வந்த கார் மோதி கணவன் மனைவி பலியானது வேப்பம்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.