தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, நடிகர் அஜித்குமார் காலை 6.50 மணிக்கே வருகை தந்தார். காரில் வருகை தந்த அஜித்தைக் கண்டதும் அவரை ரசிகர்கள் மொத்தமாக சூழ்ந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
அதற்குள் ரசிகர்கள் வாக்குச்சாவடிக்குள்ளும் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த துணை ராணுவப்படையினர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த ரசிகர்களை வெளியேற்றினர். பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரை முன்னதாக வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர். தொடர்ந்து ஆவணங்களை சமர்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டார். பின்னர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி காலை 6.54 மணிக்கே தமிழகத்திலேயே முதல் ஆளாக நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார். இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் குவிந்திருந்த பொதுமக்களும் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
கடந்த முறை விஜய் கருப்பு, சிவப்பு நிற சைக்கிளில் வந்து வாக்களித்தது பேசு பொருளான நிலையில், இந்த முறை அஜித் அணிந்திருந்த உடை, கண்ணாடியும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஜித் அணிந்திருந்த வெள்ளை நிற கோட்டின் இடது புறத்தில் பாக்கெட்டில் கருப்பு மற்றும் சிவப்பு நிறம் இடம்பெற்று இருந்தது. அதுபோக கருப்பு நிற கண்ணாடியும் அணிந்து வாக்குச்சாவடிக்குள் நுழைந்தார். இதனால் அஜித் எங்களுக்கு தான் மறைமுக ஆதரவு தந்துள்ளார் என திமுகவினர் சோசியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர். இன்னொருபுறம் முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் தனது நண்பர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் அஜித் வாக்களித்திருப்பார் என தவெகவினர் சோசியல் மீடியாக்களில் பரப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல் ஓட்டு... தல ஓட்டு... முதல் ஆளாக வாக்களித்த அஜித்... ரசிகர்களால் வாக்குச்சாவடிக்குள் களேபரம்...!
இந்நிலையில் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக பெல்ஜியத்தில் முகாமிட்டிருந்த நடிகர் அஜித்குமார் ஜனநாயக கடமையாற்றுவதற்காக நேற்று சென்னை திரும்பினார். துபாயில் இருந்து சென்னை வந்துள்ளார். நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சினிமாவில் நடித்துக்கொண்டே, சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜித்குமார் பிஸியாக இருந்தாலும் வாக்குரிமைக்கு முக்கியத்துவம் அளித்து சென்னை வந்தது சோசியல் மீடியாக்களிலும், மக்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் ஏமாத்திட்டா என்ன? நம்ம அஜித் இருக்காரே!! அதிமுக புதிய ப்ளான்! எடப்பாடியாருக்கு ஏக குஷி!