தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளை நெருங்கும் திமுக அரசு, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிற விமர்சனம் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பான குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக ஆகியவற்றிலிருந்து மட்டுமல்லாமல், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் போன்ற புதிய அரசியல் சக்திகளிடமிருந்தும் எழுந்துள்ளன. குறிப்பாக, கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, ஆறுகளை இணைத்தல் மற்றும் சுத்தப்படுத்துதல், அரசுப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேறவில்லை என்பது பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாக்குறுதி மீறல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு நீட் விலக்கு உள்ளிட்ட உறுதிமொழிகளை கைவிட்டுவிட்டதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து மாநிலத்தை பாதுகாப்பற்றதாக ஆக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டுகிறார்.

தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கூறிய தூய்மை பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஒட்டுமொத்த திமுகவுக்கும் முடிவுரைக்காலம் நெருங்கி விட்டது என அதிமுக விமர்சித்துள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கட்டவிழ்த்துவிட்டு அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக, ஒத்துஊதும் அதிமுக..! திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!
மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்த பின்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று போராடும் மக்களை காவலர்களைக் கொண்டு குண்டு கட்டாக கைது செய்து அச்சுறுத்தும் ஸ்டாலின் தலைமையிலான கொடுங்கோல் திமுக ஆட்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திமுகவுக்குமே முடிவுரை காலம் நெருங்கிவிட்டது என விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லேப்டாப் திட்டத்தை சீர்குலைக்க EPS முயற்சி... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு...!