7-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் நாளில், புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் செயல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காலையில் அவையிலிருந்து திடீரென வெளியேறிய அவர், பின்னர் தனி அறையில் பதவியேற்றுக்கொண்டார்.
இன்று காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவை கூடியபோது, தற்காலிக சபாநாயகர் கருப்பையா புதிய எம்.எல்.ஏ-க்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மற்ற உறுப்பினர்கள் வரிசையாகப் பதவியேற்று வந்த நிலையில், அவைக்கு வந்த சி.வி. சண்முகம் பதவியேற்காமலேயே பாதியிலேயே வெளியேறினார். இது அவையில் இருந்தவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதிமுக-விற்குள் எடப்பாடி பழனிசாமிக்கும் இவருக்கும் இடையே நிலவி வரும் உச்சகட்டப் போர் காரணமாகவே, அவர் பொதுவெளியில் பதவியேற்பதைத் தவிர்த்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அவையில் பதவியேற்பு நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சி.வி. சண்முகம் மட்டும் விடுபட்டிருந்தார். பின்னர், தற்காலிக சபாநாயகர் கருப்பையாவின் அறைக்குச் சென்ற சி.வி. சண்முகம், அங்குள்ள சபாநாயகர் முன்னிலையில் மட்டும் ரகசியமாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இதன் மூலம் அவர் சட்டப்பூர்வமாக 17-வது சட்டப்பேரவையின் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
நேற்று முன்தினம் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தது முதல், இன்று அவையில் பதவியேற்பைத் தவிர்த்தது வரை சி.வி. சண்முகத்தின் ஒவ்வொரு நகர்வும் அதிமுக-வின் பிளவை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவையில் அமர அவர் விரும்பவில்லை என்பதையே இந்தத் தனி அறை பதவியேற்பு உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.
நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சி.வி. சண்முகம் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது எடப்பாடி தரப்பிற்குப் பெரும் கவலையை அளித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சபாநாயகர் ஆகிறார் ஜேசிடி பிரபாகர்..! போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு..!!