நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை. ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உடன் தவெக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அப்போது தவெகவிற்கு ஆதரவளிக்கும் படி ஒரு தரப்பினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தியுள்ளனர், ஆனால் எடப்பாடி பழனிசாமியோ திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்ததாக அக்கட்சியினரே அவர் மீது குற்றச்சாட்டினர்.
அத்துடன் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து தவெகவிற்கு ஆதரவும் தெரிவித்தனர். ஆனால் தவெகவில் யாருக்கும் எந்த அமைச்சர் பதவியும் வழங்கப்படாததையடுத்து மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பிய ரத்தத்தின் ரத்தங்கள் எடப்பாடியிடம் மன்னிப்பு கேட்ட சம்பவங்களும் அரங்கேறியது. ஆனாலும் அதிருப்தியில் இருந்த 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகினர். தற்போது சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என இரண்டு முக்கியப் புள்ளிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இருந்து விலகியதோடு தவெகவில் இணைய உள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியமாவதை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக கண்டுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அ.தி.மு.க வை விட்டு வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணையும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்களின் சுயநலத்திற்காகவே கட்சி மாறுகிறார்கள்” என்று அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார்.
இதையும் படிங்க: அரசியலின் அடுத்தடுத்த திருப்பங்கள்..! நாளை முதல் தவெக..! C.விஜயபாஸ்கரின் புதிய ரூட்... முக்கிய அறிவிப்பு..!

சமீபகாலமாக அ.தி.மு.க வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது குறித்துக் கோவையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுப் பேசி உள்ள பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி மாறுபவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பாய்ந்து உள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: “அ.தி.மு.க வை விட்டுச் செல்பவர்கள் அனைவரும் தங்களது சுயநலத்திற்காக மட்டுமே மாறுகிறார்கள். அவர்கள் மீதுள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு (சொத்துக் குவிப்பு வழக்கு), ஊழல் வழக்கு மற்றும் நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு சட்ட ரீதியான வழக்குகள் அவர்களின் கழுத்தை நெறிக்கின்றன. இந்த வழக்குகளில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தப்பித்துக் கொள்ளவுமே அவர்கள் தற்பொழுது கட்சி மாறிப் புகலிடம் தேடுகிறார்கள்.”
அ.தி.மு.க வில் இருந்து த.வெ.க-விற்கு நிர்வாகிகள் மைகிரேஷன் (Migration) ஆகி வரும் சூழலில், “அ.தி.மு.க விற்குத் துரோகம் இழைத்து விட்டுச் செல்பவர்களின் பின்னணியில் வழக்கு பயம் மட்டுமே உள்ளது” எனப் பொள்ளாச்சி ஜெயராமன் ஓப்பனாகப் பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில், குறிப்பாகக் கொங்கு மண்டல அ.தி.மு.க மற்றும் த.வெ.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க: திக்... திக்... திகிலில் எடப்பாடி... கூண்டோடு பதவி விலகல்... அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அறிவிப்பு...!