தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் ஒரு பிரிவினர் வாக்களித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் மேனாள் அமைச்சருமான திரு. கே.பி. முனுசாமி அவர்கள் இன்று (13.05.2026) மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆளுங்கட்சியின் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கிச் சொந்த இயக்கத்திற்கே துரோகம் இழைப்பவர்களை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
கழகத்தின் அடையாளமான இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்று வெற்றி பெற்றவர்கள், இப்போது தலைமைக்கு எதிராகத் திரும்புவது மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எடப்பாடியாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தித் தொகுதி மக்களிடம் வெற்றி பெற்றவர்கள், தற்போது ஆளுங்கட்சி காட்டிய பதவி ஆசை மற்றும் ஆசை வார்த்தைகளை நம்பிப் பொம்மலாட்டத்திற்கு இரையாகிவிட்டனர். எடப்பாடியாரைக் கழக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் தாங்களே சொந்தக் கையெழுத்திட்டுவிட்டு, தற்போது அதனை மறுப்பது அவர்களின் பதவி ஆசை முற்றிவிட்டதையே காட்டுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதல்வராக்க திமுக முயன்றது என்ற வாதத்தை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். அமைச்சராக வேண்டும் என்ற பதவி வெறியில் இவர்கள்தான் திமுக பக்கம் பேசினார்களோ என்ற சந்தேகம் இப்போது தொண்டர்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது. ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதும், குதிரை பேரம் செய்வதும் தான் முதலமைச்சர் செய்யும் "மாற்று அரசியல்" தானா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: “அறியாமல் செய்த தவறு; அரசியலாக்க வேண்டாம்”: அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!
முதல்வரின் செயல்பாடுகள் மனசாட்சிக்கு விரோதமாக இருப்பதாக முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். கழகப் பொதுச் செயலாளரை அவதூறாகப் பேசும் உறுப்பினரின் இல்லத்திற்கு முதலமைச்சர் செல்வது எந்த விதத்தில் நியாயம்? இது பேரவைத் தலைவரின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். கரூர் துயரச் சம்பவத்தின் போது எடப்பாடியார் நியாயத்தின் பக்கம் நின்று பேசியதாலேயே முதலமைச்சரின் பொதுவாழ்வு அன்று பாதுகாக்கப்பட்டது என்பதை அவர் நினைவூட்டியுள்ளார்.
கழக உறுப்பினர்களுக்குப் புத்திமதி கூறும் வகையில் மிகக் காட்டமான அறிவுரைகளை அவர் வழங்கியுள்ளார். பதவி எனும் தோளில் போடும் துண்டுக்கு ஆசைப்பட்டு, கழகம் எனும் இடுப்புக்குக் கீழ் கட்டும் வேட்டியைக் கழற்றிவிட்டு நிற்காதீர்கள் என அண்ணாவின் வழிநின்று அவர் எச்சரித்துள்ளார்.
ஆளுங்கட்சியின் கைப்பாவையாகத் துடிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இயக்கத்தைப் பிரித்துச் செயல்படுபவர்கள் நான்காம் தர அரசியல்வாதிகள் போலச் செயல்படுவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: லிஸ்ட் போட்டு தூக்கும் தவெக அரசு!