புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, சென்னை மெரினா காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் (விசிக) அளித்த புகாரின் அடிப்படையில் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து ஏர்போர்ட் மூர்த்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அண்மையில், சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவனை ஒருமையில் பேசியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி, விசிக தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சட்டவிரோத சூதாட்ட வழக்கு.. கையும் களவுமாக சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..!!
இதையடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலக வாசலில் ஏர்போர்ட் மூர்த்தியை விசிக ஆதரவாளர்கள் செருப்பால் தாக்கினர். இதற்கு பதிலடியாக, மூர்த்தி தன்னிடமிருந்த பாக்கெட் கத்தியால் விசிக நிர்வாகி திலீபனை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் திலீபனுக்கு கையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 16 தையல்கள் போடப்பட்டன. இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில், மெரினா காவல்துறையினர் விசிகவினர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
டிஜிபி அலுவலகம் முன்பாக நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்ற பல அரசியல் தலைவர்கள் இந்தத் தாக்குதலைக் கண்டித்தார்கள். காவல்துறை தலைமை அலுவலகம் முன்பாகவே இப்படி ஒரு தாக்குதல் நடந்தது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஏர்போர்ட் மூர்த்தியை இரவோடு இரவாக போலீசார் கைது செய்துள்ளனர். கொடுங்காயம் ஏற்படுத்தும் வகையில் விசிகவினரை கத்தியால் தாக்கியதாக ஏர்போர்ட் மூர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தியை எழும்பூரில் உள்ள நீதிமன்ற குடியிருப்பில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

ஏர்போர்ட் மூர்த்தியின் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆதரவு தெரிவித்து, காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்துள்ளார். இது விசிக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் தமிழக அரசியலில் பட்டியலின மக்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் இது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதையும் படிங்க: அரசு நிதியில் பயணம்.. எழுந்த பரபரப்பு புகார்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது..!!