மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் நகை திருட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்தார். நிகிதா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அஜித்குமார் உயிரிழந்த நிலையில், பெரும் சர்ச்சையை கிளப்பியது. அஜித் குமார் காவலர்கள் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
பின்னர் அஜித்குமாரின் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மிருகத்தனமான தாக்குதல் என கூறி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், வழக்கை சிபிஐக்கு மாற்றினர். சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், திருபுவனம் அஜித் குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அஜித் குமாரின் மரண வழக்கில் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறையாக நிறைவேற்றி உள்ளதாகவும், வழக்கிற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழக அரசு வழங்கி வருவதாகவும் தெரிவித்த நீதிபதிகள், கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் அஜித் குமார் கொலை வழக்கு விசாரணை.. 5 பேருக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!
அஜித் குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 7.5 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அஜித் குமார் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கின் சாட்சிகளுக்கு பாதுகாப்பு தருவது தொடர்பான மனுவை ஏழு நாட்களில் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நேற்றே ஆவணங்களை கொடுத்தாச்சு..! அஜித் இறப்புச் சான்று குறித்து போலீஸ் விளக்கம்..!