சிவகங்கையில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் மீது நிகிதா என்ற பெண் புகார் கொடுத்துள்ளார். நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைப்பு அழைத்துச் செல்லப்பட்ட நபரை சரமாரியாக தாக்குவதற்கு அதிகாரம் கொடுத்தது யார், சிறப்பு காவல் படை எப்படி அஜித் குமாரை தாக்கியுள்ளனர், உரிய முறையில் விசாரிக்காமல் தாக்கி கொலை செய்தது எப்படி நியாயமாகும் உள்ளிட்ட கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அஜித் குமார் கொலை சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். திமுக அரசின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதனிடையே, போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித் குமார் வீட்டுக்கு சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவரது சகோதரர் மற்றும் தாயிடம் நிலைமை குறித்து கேட்டறிந்ததுடன் அஜித் குமார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை எனவும் யாரெல்லாமோ தலைமை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். அந்தந்த மாவட்ட எஸ்பி மற்றும் டிஎஸ்பி என்ன செய்கிறார்கள் என்றும் யார் யாரோ போன் செய்து அதன்படி அஜித்குமாரை கடத்திச் சென்று படுகொலை செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ரத்தமே விஷம்! சிதைந்து போன தசைநார்கள்.. அஜித்துக்கு நடந்த துயரத்தை விளக்கிய வழக்கறிஞர்..!

சிறப்பு காவல் படை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு விசாரித்து தண்டனை கொடுக்க வேண்டும்., ஆனால் அஜித் குமாரை பொறுத்தவரை நேரடியாக சிறப்பு காவல் படை அவரை தூக்கிச் சென்று இரும்பு கம்பியால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்திருப்பதாக கூறினார். தினசரி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் சிவகங்கையில் 7 வயது சிறுவன் பள்ளியில் மர்மமான முறையில் இறந்துள்ளார் அதற்கும் தாங்கள் நீதிவிசாரணை வேண்டுமென்று கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அஜித் குமார் கொலை வழக்கிலும் முழுவதுமாக சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாகவும் குற்றங்கள் நடைபெற்ற பிறகு ஈசியாக சாரி சொல்கிறார்கள்., இவற்றை லாக்கப் டெத் என்று சொல்லக்கூடாது போலீசாரால் செய்யப்பட்ட படுகொலை என்று சொல்ல வேண்டும் என்று சாடினார்.

அஜித் குமார் நகை திருடியதாக குற்றம் சாட்டிய நிகிதா மீது 2011 ஆம் ஆண்டு பண மோசடி வழக்கு இருப்பதாகவும், துணை முதலமைச்சர் உதவியாளர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார் என்றும் அவர் கணவரிடம் இருந்து மிரட்டி பணம் பெற்று இருக்கிறார் என்ற செய்தி வருவதாகவும் கூறினார். நிகிதா யாருக்கு போன் செய்தார் ? தலைமைச் செயலகத்துக்கு யார் போன் செய்தது? தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் யாருக்கு போன் செய்தார்கள்? இதையெல்லாம் முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அப்படி என்ன அவசரம்? மாத்தி வெய்ங்க..! நீதிபதி கொடுத்த ஷாக்... தவெக அப்செட்!