அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசின் தொழில்துறை அணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் அண்டை மாநிலங்களை நாடும் தொழில் நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசு தொழில்துறை முதலீடுகளை உண்மையில் வரவேற்கிறதா அல்லது அவற்றை வழியனுப்புகிறதா என்று கேட்டார்.
தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளைத் தொடங்கவும் விரிவுபடுத்தவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் வழங்கும் தென்கொரியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள், தமிழக அரசின் அலட்சியத்தால் தற்போது தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் முதலீடு செய்வதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக நாளிதழ்களில் வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டினார்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் தமிழகத் தொழில்துறை அமைச்சர் தென்கொரியாவுக்குச் சென்று அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதமே ஆந்திர மாநில அமைச்சர் நர லோகேஷ் அதே நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்த நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நாடிச் செல்வதற்கான காரணங்கள் என்ன, தமிழகத்தில் முதலீடு செய்வதில் உள்ள தடைகள் என்னென்ன, அவற்றைக் களைய தொழில்துறை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய நிலையில், வெறும் ரீல்ஸ் போட்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துவிடலாம் என்ற பகல் கனவில் திளைப்பது வெட்கக்கேடானது என்று கடுமையாகச் சாடினார்.
இதையும் படிங்க: "எங்க வாழ்க்கைய காப்பாத்துங்க".! முதல்வரின் கான்வாயை மறித்து மனு.! புதுக்கோட்டையில் பரபரப்பு.!!
புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே தொழில் தொடங்க ஒப்புக்கொண்ட நிறுவனங்களின் முதலீடுகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதைக்கூட உணராத அலட்சியத்தால், தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனால் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.கேமராக்களுக்கு முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதால் மட்டும் தமிழகம் எந்த வகையிலும் வளர்ச்சியடைந்துவிடாது என்பதை இனியாவது உணர்ந்து, தொழில் முதலீடுகளை ஈர்த்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: #BREAKING வேகமெடுக்கும் புதிய தலைமைச்செயலக பணிகள்... பட்டினம்பாக்கத்தில் குடியிருப்புகளை இடித்து அகற்ற தமிழ்நாடு அரசு உத்தரவு...!