மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கலைஞர் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்ததுடன் அதன் இலட்சினை வெளியிட்டார். அதனை நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார்.
மேலும் திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கலைஞர் நிதி நழுகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: தொடரும் மீனவர்கள் கைது.. எப்பதான் தீர்வு வரும்? வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
மேலும் அதற்கான இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார். இதன் மூலம் இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்கு ஆண்டுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட எட்டு நூல்களான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும், திமுக வரலாறு, இளைய திராவிடம் எழுகிறது உள்ளிட்ட நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதனை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதி குறித்த சிறப்பு காணொளியும் ஒளிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் கலைஞரின் சிலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவு பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் டி ஆர் பாலு, கனிமொழி, கே.என். நேரு, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இனிமே " உங்களுடன் பொம்மை" என பெயர் மாத்திக்கோங்க! நக்கலடித்த அதிமுக