தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் நாகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்த பின்னர், திமுக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை தனது அறிக்கையில், “ராமேஸ்வரம் மக்களின் நலனுக்காக மத்திய அரசு அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.19 கோடி மதிப்பில் 50 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்டியது. அதே திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையத்தில் 100 கடைகள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திமுகவினர் தனியார் ஓட்டலில் ஏலம் விட்டு ஊழல் செய்துள்ளனர். யாருக்கும் கடை ஒதுக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ராமநாதபுரம் குப்பை நகரமாக மாறியுள்ளது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை கூட அமைத்து தர முடியாமல், மாணவர்கள் 20 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் அவல நிலை நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமூக நீதி பற்றி பேச திமுக வெட்கப்பட வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினின் இல்லத்தரசி திட்டம்! ரூ.4,000 கோடி ஊழலுக்கு வழிவகுக்கும்!! திமுக மீது பாஜக பகீர் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். “2022 நவம்பரில் திமுக கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் ஆகியோர் ரூ.360 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
2024-ல் ராமநாதபுரம் திமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகி இப்ராஹிம் ரூ.70 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். ரூ.2000 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஜாபர் சாதிக் வழக்கிலும் ராமநாதபுரம் திமுக நிர்வாகி சம்பந்தப்பட்டுள்ளார். ராமநாதபுரம் திமுகவால் போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ளது” என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
ராமநாதபுரம் மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றத் தவறிய திமுக அரசு, சமூக நீதி பற்றி பேசுவது நகைப்புக்குரியது என்று அண்ணாமலை விமர்சித்தார். தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலையின் இந்த கடுமையான தாக்குதல், ராமநாதபுரம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இது ரொம்ப பெரிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!! அவினாசி மக்களுக்கு அண்ணாமலை வாக்குறுதி!!