தீபாவளியை பண்டியையொட்டி தீயணைப்புத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், தொழில்துறை சார்ந்த அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், உள்ளிட்ட 20 துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் லஞ்சமாக பணமோ பொருளோ வாங்குவதை தடுக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்து, லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டும் அரசு துறைகளைச் சார்ந்த அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டையைத் தடுப்பதற்காக, லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் சோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக செயல்படும் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவினர் 48 தனிப்படை அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 5 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை வியாசர்பாடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 18,000 ரூபாயும், அம்பத்தூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 45 ஆயிரம் ரொக்கத்துடன், தங்க நாணயமும் பறிமுதல் செய்யப்பட்டது. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அரசு அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 18 ஆயிரம் ரூபாயும், குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் 19 ஆயிரம் ரூபாயும் கணக்கில் காட்டப்படாத தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் உதவி வருவாய் அலுவலர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்களின் அறையில் இருந்து ரூ.40 ஆயிரம் பணமும், 30 சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: ரூட்ட மாத்து... 2 நாளுக்கு இத செய்யவே கூடாது! கனரக வாகனங்களுக்கு பறந்த உத்தரவு...!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான சோதனையில், கணக்கில் வராத 1 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தில் உள்ள போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி அழகேசன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது லைசென்ஸ் எடுக்க இடைதரர்களாக செயல்பட்டவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத 25,350 ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ஜூஜூவாடி பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனை சாவடி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் காட்டப்படாத ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர், அப்போது அங்கு கணக்கில் வராத 1,77,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
ஈரோடு வெண்டிபாளையத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட நீர்வளத்துறை அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெறுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உதவி பொறியாளர் குமரேசன் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது. அவரிடம் பணம் கொடுக்க வந்த நபர் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருவள்ளுரில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு நிறுவனம், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பண்டாரபுரத்தில் அமைந்துள்ள நாகர்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகம், ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகம், புதுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள நீர்வளத்துறை பிரிவு, குளித்தலை பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் சோதனையானது நடத்தப்பட்டு ரொக்க பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: தீபாவளி பலகாரம்... லைசன்ஸ் இல்லைனா பத்து வருஷம் ஜெயில்! வழிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு...!