தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தேசியத் தலைவர்களின் வருகையால் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த மக்கள் சேவகர். அவரது கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு அபாரமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அவர் மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த வளர்ச்சி தொடரும்," எனத் தனது ஆதரவைத் தெரிவித்தார். அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி குறித்துப் பேசிய கெஜ்ரிவால், தனது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்தார்.
டெல்லியில் நான் கொண்டு வந்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் பாஜக அரசு தடுத்து நிறுத்தியது. அதேபோல, தமிழகத்தில் என்.டி.ஏ தலைமையிலான ஆட்சி அமைந்தால், டெல்லியில் செய்தது போலவே இங்கும் அனைத்து நல்ல திட்டங்களையும் பாஜக முடக்கிவிடும். இந்த அனுபவம் எனக்கு உண்டு, அதனால் தமிழக மக்களை நான் எச்சரிக்கிறேன்.
இதையும் படிங்க: தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!
மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தைக் கொலை செய்து வருகிறது. இந்தியாவில் ஒரு சில மாநிலங்கள் மட்டுமே பாஜகவின் சர்வாதிகாரப் போக்கை வலுவாக எதிர்த்து வருகின்றன. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தொகுதி மறுவரையறை மசோதா ஒரு 'தாக்குதல்' நாடாளுமன்றத்தில் அண்மையில் தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேசிய அவர், தொகுதி மறுவரையறை மசோதா என்பது ஜனநாயகத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதல். அந்த மசோதா தோல்வி அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மோடியின் மத்திய பாஜக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என அதிரடியாகக் கூறினார்.
நாளை நடைபெறும் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து அவர் உரையாற்ற உள்ளார். "தனிப்பெரும்பான்மையுடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பார்" என்ற நம்பிக்கையோடு கெஜ்ரிவால் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது திமுக - ஊட்டியில் பியூஷ் கோயல் ஆவேசம்!