பவானி ஆற்றில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சத்தியமங்கலம் அருகே கொட்டப்பட்டிருந்த பேரூராட்சியின் திடக்கழிவுகள் பெருமளவு தண்ணீரீல் அடித்து செல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆற்றை ஆக்கிரமித்து கொட்டப்படும் கழிவுகளால் பவானி ஆறு மாசடைவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் பேரூராட்சி நிர்வாகத்தினால் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள், பழைய கலையனூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்படுகின்றன. பல ஆண்டுகளாக, டன் கணக்கில் கொட்டப்படும் கழிவுகள் காவிரி ஆற்றை ஆக்கிரமித்து மலை போல் தேங்கி கிடக்கின்றன.
இதனிடையே, கடந்த வாரம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 20 ஆயிரம் கன அடி உபரி நீரால், பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், ஆற்றில் ஆக்கிரமித்து தேங்கி கிடந்த திடக்கழிவுகளில் பெருமளவு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அதிகப்படியான நீரோட்டத்தின் போது, இது போன்று கழிவுகள் ஆற்று நீரில் அடித்து செல்லப்படுவதாக கூறும் இப்பகுதியினர், இதனால் பவானி ஆறும், அது சென்று கலக்கும் காவிரியும் மாசடைவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: ஆபரேஷன் மஹாதேவ்.. வெறிகொண்டு வேட்டையாடும் இந்திய ராணுவம்.. 12 பயங்கரவாதிகள் கதைமுடிப்பு!!
மேலும், இந்த குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால், அருகில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். திடக்கழிவுகளை அரைத்து குப்பைகளாக மாற்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தாலும் அவை முறையாக செயல்படுத்துவதில்லை என்பதும் இப்பகுதியினரின் புகாராகும். நதி நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் குப்பை கிடங்கை பவானி ஆற்றில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றவும், திடக்கழிவை முறையாக மேலாண்மை செய்யவும் பவானி நதி கூட்டியக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்..
இதையும் படிங்க: சட்டசபையில் ரம்மி ஆடிய அமைச்சருக்கு விளையாட்டுத்துறை! மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..