நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் குடியரசுத் தலைவர் தீர்மானத்துக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவது வழக்கமானது. அதன்படி, கடந்த 4ம் தேதி மாலை 5 மணிக்கு உரையாற்றவிருந்த பிரதமர் மோடி, அன்றைய தினம் அவைக்கு வரவில்லை. இதுகுறித்து விளக்கமளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு வந்து தாக்கலாம் என்பதால் பிரதமர் மோடியை வர வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
அதாவது 4ம் தேதி மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டில் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்ட சிலர் சபையில் பிரதமர் இருக்கைக்கு அருகே சென்று அவரை தாக்க திட்டம் தீட்டியுள்ளனர். இதனால் பிரதமருக்கு காயம் ஏற்படவும் வாய்ப்புண்டு எனக்குறிப்பிடப்பட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
நாட்டின் பிரதமர் மீது எதிர்க் கட்சி பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்ததாக, மக்களவை சபாநாயகரே குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மக்களவையில் விளக்கம் கொடுத்த காங்கிரஸ் எம்பி சுதா, து முற்றிலும் தவறானது. பெண் எம்பிக்கள் மீது அப்பட்டமாக பழி போடுகிறார்கள். நாங்கள் பிரதமர் மோடி மதிக்கிறோம். சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க பயந்து கொண்டு, பொய்யான தகவலை கொண்டு பெண் எம்பிக்கள் மீது பழிபோடுகிறார்கள்.பிரதமரை தாக்க பெண் எம்பிக்கள் சென்றோம் என்று சொல்வதற்கு அசிங்கமாக இல்லையா? அவர்கள் மீது இப்படியொரு பழிபோடுகிறோமே.. மக்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்க மாட்டார்களா? என சரமாரியாக சாடியிருந்தார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து தொடர் விடுமுறை... அரசு போக்குவரத்து துறை வெளியிட்ட குட்நியூஸ்...!
இந்நிலையில் சுதா எம்.பி.யின் மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான கும்பகோணம் நகரம் முழுவதும் பாஜகவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், “பாராளுமன்ற மான்பை கெடுத்து மயிலாடுதுறை பாராளுமன்ற வாக்காளர்களை தலைகுனிய வைத்த கலிகால சூர்ப்பனங்கை சுதா எம்.பி.யை வன்மையாக கண்டிக்கிறோம்” என வாசகங்கள் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அச்சிடப்பட்டுள்ளன. மாண்பு என அச்சிடுவதற்குப் பதிலாக மான்பு என அச்சடித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது ஒருபுறம் சோசியல் மீடியாக்களில் பரப்பப்பட்டு வந்தாலும், பெண் எம்.பி.யை அநாகரீகமாக விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களுக்கு கண்டனமும் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: திமுகவின் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது: சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்!