முதலமைச்சர் விஜய் குறித்து தகாத வார்த்தைகளில் விமர்சித்தது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, நேற்று நள்ளிரவே சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தமிழிசை கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திர ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு "அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட வேண்டியவர்தான். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றமே, 'ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பேச வேண்டிய பேச்சா இது?' என்று கேள்வி எழுப்பியுள்ளது. அதனால், யார் வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
முதல்வர் விஜயை மட்டுமல்ல, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்களையும் சமூக வலைதளங்களில் திமுகவைச் சேர்ந்த சிலர் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் அதைக் கண்டிக்கவில்லை. எனவே, அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை. இது போன்ற தரக்குறைவான கருத்துகளைப் பதிவு செய்பவர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு பாடமாக இருக்க வேண்டும். அரசியல் விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால், அதற்கும் ஒரு நாகரிகமான வரம்பு இருக்க வேண்டும். எதிர்க்குரல் கொடுத்தாலும் அது கண்ணியத்துடனும் நாகரிகத்துடனும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து" என்றார்.
இதையும் படிங்க: யாரு வற்புறுத்தினாங்க..? எதாச்சு சொல்லின்னு இருக்காதீங்க..! Ex. அமைச்சர் பேச்சுக்கு செங்கோட்டையன் COUNTER..!!
மேலும், பிற கட்சிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "கட்சியின் தூய்மையை எப்போதும் பாதுகாக்க வேண்டும். அனைவரையும் சேர்த்துக்கொள்வதை விட, மக்களின் தீர்ப்பை மதிப்பதே முக்கியம்.
மக்கள் தேர்ந்தெடுத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்வது வருத்தமளிக்கிறது. இதனால் மக்களின் வரிப்பணமும் வீணாகிறது. குறிப்பாக, விஜயபாஸ்கர் போன்றோர் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள். மக்களின் தீர்ப்பை மதிக்காமல், தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. இத்தகைய சுயநல முடிவுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு பின்னர் பாஜக அல்லது வேறு கட்சிகளை குற்றம்சாட்டுவது நியாயமல்ல. தங்களது அரசியல் முடிவுகளுக்கு மற்றவர்களை காரணம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று தெரிவித்தார்.
மேலும், "பணம் கொடுத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வது போன்ற எந்த நடவடிக்கையையும் நான் கடுமையாக கண்டிக்கிறேன். ஆனால், இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே அதிரடி... கோவை முழுவதும் களமிறங்கியது காவலர்கள் படை... காரணம் என்ன?