சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்தி, நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றும் திட்டம் தமிழக அரசால் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தப் பழமையான பேருந்து நிலையம், ஒரு காலத்தில் சென்னையின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கியது. வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கான பேருந்துகள் இங்கிருந்தே இயக்கப்பட்டன.
ஆனால், இடப்பற்றாக்குறை மற்றும் நகர விரிவாக்கம் காரணமாக கோயம்பேடு மற்றும் பின்னர் கிளாம்பாக்கம் போன்ற புதிய நிலையங்களுக்கு மாநகருக்கு வெளியேயான பேருந்துகள் மாற்றப்பட்டன. தற்போது பிராட்வேயில் முக்கியமாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.இந்த நிலையத்தை இடித்து, அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய வளாகம் அமைக்கும் முடிவு 2024-ஆம் ஆண்டில் "வட சென்னை வளர்ச்சித் திட்டம்" என்ற திட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் 823 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 200 கோடி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 115 கோடி, மீதமுள்ள தொகை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. நாளை முதல் பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம் செய்யப்படும் என்ற அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு புதிய வரி... இரவோடு, இரவாக குண்டைத் தூக்கிப்போட்ட டிரம்ப்... இந்த முறை எதற்கு தெரியுமா?
இந்த நிலையில் சென்னை பிராட்வே பேருந்து நிலையம் நாளை முதல் இடம் மாற்றப்படும் என்ற அறிவிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் எனவும் மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பட்டியலினத்தவர் தனித் குடித்தனம் போனா கான்கிரீட் வீடு..! இபிஎஸ் கொடுத்த வாக்குறுதி..!