சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் " உங்களுடன் ஸ்டாலின் " திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்புவனம் தாலுகாவில் மடப்புரம், பொட்டப்பாளையம், பழையனூர், திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் " உங்களுடன் ஸ்டாலின் " திட்ட முகாம் நடந்தது. ஆகஸ்ட் மாதத்தில் நடந்த முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மூட்டையாக கட்டி வைகை ஆற்றினுள் அதிகாரிகள் போட்டுள்ளனர். மனுக்கள் பலவும் நீரில் மூழ்கிய நிலையில் ஒரு சில மனுக்கள் மட்டும் மிதந்துள்ளன. அவற்றை அப்பகுதியில் சென்ற சிலர் சேகரித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து வருவாய்த் துறை அதிகாரிகள் மனுக்களை சேகரித்து எடுத்து சென்றனர். மனுக்களை வைகை ஆற்றில் வீசிய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மனுக்களில் தாசில்தார், ஆர் ஐ , விஏஒ ஆகியோரது கையெழுத்து போடப்பட்டுள்ளது. எனவே இது தீர்வு காணப்பட்ட மனுக்களாக இருக்கலாம் எனக்கூறப்பட்டது.
இதனிடையே, வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள் மிதந்து சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலானது. இதுதொடர்பாக அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில் திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்.. கடுமையாக சாடிய அதிமுக..!!
வைகை ஆற்றில் " உங்களுடன் ஸ்டாலின் " முகாமில் பெறப்பட்ட மனுக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார் புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தாசில்தார் புகாரில் அடையாளம் தெரியாத நபர்கள் மனுக்களை திருடிச் சென்று தண்ணீரில் வீசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே " உங்களுடன் ஸ்டாலின் " திட்ட முகாம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படுவதால் ஆர்வத்துடன் மனுக்கள் அளித்து வருகின்றனர். இதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வேண்டுமென்றே யாரோ மனுக்களை திருடி ஆற்றில் வீசியிருப்பதாக திமுகவினர் சோசியல் மீடியாக்களில் பரப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனசாட்சி இல்லையா? அஸ்தியை கரைக்குற மாதிரி மனுக்கள் கொட்டி இருக்கீங்க! இபிஎஸ் கண்டனம்..!