அமைதியான முறையில் போராட்டம் நடத்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமை உண்டு என்றும், போராட்டத்தைக் காரணம் காட்டி டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் நாளை (அக். 10) மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தைக் காரணம் காட்டி டெல்லி முழுவதும் வரலாறு காணாத அளவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இன்று அவசர முறையீடு செய்தனர்.

அப்போது முறையிட்ட வழக்கறிஞர்கள், டெல்லியில் அமைதியான வழியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட உள்ளதாகவும், இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. டெல்லிக்கு வரும் பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குடியிருப்போர் நலச் சங்கங்களிடம் மக்கள் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு, 23,000 துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்குகள்..! உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்.! சிக்கலில் தேர்தல் ஆணையம்..!!

போராட்டத்தில் பங்கேற்பவர்களைக் கைது செய்து அடைக்க 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மசூதிகள், குருத்வாராக்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் அடைக்கலம் தரக்கூடாது என டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இல்லையா? எனவே, போராட்டம் நடத்த உரிய இடத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.
இந்த முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, அமைதியான வழியில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன், போராட்டத்தைக் காரணம் காட்டி மெட்ரோ ரயில் சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அதெல்லாம் முடியாது..! நாள் முழுக்க எப்படி பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும்..? சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!