பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்தின் நில மோசடி தொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் போலி அறக்கட்டளை பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 15.07.2026 அன்று இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தென்மண்டல எஸ்பி சாஜிதா நேரடியாக வருகை தந்து, கோயில் செயல் அலுவலர் கணபதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
இவ்வழக்கு தொடர்பாக, கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற வட்டாட்சியர் (தாசில்தார்) மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகியோரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு, 1880-ஆம் ஆண்டு முதலாக உள்ள ஆவணங்கள் பெறப்பட்டன.
இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரத்தில் அதிரடி திருப்பம்... சிபிசிஐடி விசாரணை வளையத்தில் முக்கிய புள்ளி...!
மேலும், வருவாய்த் துறை அலுவலர்கள் சார்பில் நிலத்தின் பல்வேறு காலகட்ட நில வகைப்பாடு (Land Classification) தொடர்பான ஆதார ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட நிலம்ஆக்கிரமிப்பில் இருந்த போது அங்கு செயல்பட்ட கடைகளுக்கு எந்த ஆவணங்களின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் கேட்டு மின்வாரியத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதனடிப்படையில் மின்வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை, சிபிசிஐடி அதிகாரிகள் திண்டுக்கல் அலுவலகத்தில் வைத்து தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்ற கிளை ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. அந்த உத்தரவின்படி, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நேற்று (27.07.2026) திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு விசாரணைக்காக ஆஜரானார்.
காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை சிபிசிஐடி ஆய்வாளர் சந்தானலட்சுமியும், அதன்பின் 11:30 மணி முதல் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கமும் தொடர் விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணை மொத்தம் 7 மணி நேரம் நடைபெற்று மாலை 5:00 மணி முடிவடைந்தது.
இந்த நிலையில் இன்று (28.07.26) 2வது நாளாக பழனி நிலத்தை பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம், தென்மண்டல சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஷாஜிதா இன்று சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி... 4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!