நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிபிஎஸ்இ (CBSE) பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடுகள் மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகள் காரணமாக, சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகிய இருவரையும் அந்தப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கி மத்திய அரசு தற்பொழுது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம்' (OSM) எனப்படும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறை முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பின்பு, விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இணையப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள் பல மங்கலாகவும், சில பக்கங்கள் விடுபட்டும் இருந்ததோடு, ஒரு மாணவனின் விடைத்தாள் நகல் மற்றொரு மாணவனுக்கு மாறி வந்ததாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. மேலும், இந்த ஆன்லைன் போர்ட்டலில் கட்டணத் தோல்விகள் மற்றும் கடுமையான சைபர் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகப் பெற்றோர்களும், மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நேரடித் தலையீட்டின் பேரில் மத்திய அரசு தற்பொழுது இந்த அதிரடி ஆக்ஷனை எடுத்துள்ளது. இதன்படி, ஐஏஎஸ் அதிகாரியான சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் நிர்வாகச் செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகிய இருவரையும் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த டிஜிட்டல் மதிப்பீட்டுத் திட்டத்திற்கான டெண்டர் (Tender) வழங்கப்பட்டதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா மற்றும் சைபர் பாதுகாப்பு குறைபாடுகளுக்கான பின்னணி என்ன என்பது குறித்து முழுமையாக விசாரிக்க 'சொபாசிட்டி பில்டிங் கமிஷன்' தலைவர் எஸ். ராதா சவுகான் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவையும் மத்திய அமைச்சரவைச் செயலகம் அமைத்துள்ளது.
இதையும் படிங்க: “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!
இந்த உயர்மட்டக் குழு ஒரு மாதத்திற்குள் தனது விரிவான விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளுக்குப் பின் சிபிஎஸ்இ நிர்வாகத் தலைவர்கள் கூண்டோடு மாற்றப்பட்டிருப்பது ஒட்டுமொத்த கல்வி வட்டாரத்திலும் தற்பொழுது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!