செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த பெருக்கருணை கிராமத்தில் மலை மேல் அமர்ந்திருக்கும் மரகத பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் இருந்த பழமை வாய்ந்த மரகத முருகன் சிலை கோவில் பூட்டை உடைத்து திருட்டு. விலை மதிப்பிள்ளாத மரகத முருகன் சிலை திருடப்பட்டதால் அப்பகுதி மக்கள், பக்தர்கள் பேரதிர்ச்சி. மரகத முருகன் சிலை திருட்டு குறித்து சித்தாமூர் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை.
மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம், பெருக்கரணை எனப்படும் கிராமத்தில் மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள முருகர் சிலை மரகதத்தால் ஆனதாகும். இரண்டே கால் அடி உயரம் கொண்ட இந்த மரகத சிலை, இந்த மாவட்டத்திலேயே வேறு எங்கும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த மூலவர் சிலையைத் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் சுமார் ஆறு மாதங்கள் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, காவடி எடுப்பது, அலகு குத்துவது உள்ளிட்ட பல்வேறு விமரிசையான நிகழ்ச்சிகளுடன் திருவிழாக்கள் நடைபெறும்.
இந்நிலையில், தற்போது இந்த மரகத சிலை திருடு போயுள்ளது. இதன் மதிப்பைத் துல்லியமாகக் குறிப்பிட முடியாத நிலையில், பல கோடி ரூபாய் மதிப்புடையதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகர் சிலை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.