சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை மாற்றங்கள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து ரயில்களும் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம்போல் எழும்பூர் வரை இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் நவீனப்படுத்தும் மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரையிலான ஒன்றரை மாத காலத்திற்கு எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் எழும்பூருக்கு வந்து சேரும் முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரம், சென்னை மாம்பலம் மற்றும் சென்னை கடற்கரை ஆகிய மாற்று ரயில் நிலையங்கள் வரை மட்டுமே இயக்கப்படும் என முன்னதாக ரயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த முந்தைய அறிவிப்பின்படி, மன்னார்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16180) தாம்பரம் வரையிலும், சேலம் - எழும்பூர் விரைவு ரயில் (22154) மாம்பலம் வரையிலும், திருச்சி - எழும்பூர் விரைவு ரயில் (12654) மற்றும் மும்பை சிஎஸ்டி - எழும்பூர் விரைவு ரயில் (22157) ஆகியவை சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரையிலும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று மறுமார்க்கத்தில், எழும்பூர் - மன்னார்குடி விரைவு ரயில் (16179) தாம்பரத்தில் இருந்தும், எழும்பூர் - சேலம் விரைவு ரயில் (22153) சென்னை கடற்கரையில் இருந்தும் புறப்படும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: சென்னை எழும்பூர் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
தற்போது இந்த நடைமுறை மாற்றங்கள் தொடர்பாக விரிவான நிர்வாக மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு அந்த அறிவிப்பு முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, முன்னர் குறிப்பிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் திட்டமிட்டபடி எழும்பூர் ரயில் நிலையத்திற்கே வந்து சேரும் என்றும், அங்கிருந்தே வழக்கம்போலப் புறப்பட்டுச் செல்லும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவால் தென் மாவட்ட பயணிகள் மற்றும் தினசரி ரயில் பயணிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வேளாங்கண்ணி திருவிழா: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கம்!