சென்னை இலக்கியத் திருவிழாவுக்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும் விதமாக, சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது குறித்த கோலாகல அறிவிப்பைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டுள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (BAPASI) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி, வழக்கம் போல நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
புத்தகக் கண்காட்சியில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு துறைசார் அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார நாள்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வாசகர்களுக்காக இந்தப் பெரும் விழா திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையையொட்டி திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு, அதிகபட்ச வாசகர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள பன்னாட்டுப் புத்தகக் காட்சிக்கான இலட்சினையை இன்று வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், இந்த வர்த்தகத் தளம் குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, வரும் ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் கலைவாணர் அரங்கத்தில் இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்த தமது எக்ஸ் தளப் பதிவில் அவர், இந்த நான்காவது பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் ஒரு தனித்துவமான B2B வர்த்தகத் தளம் செயல்படவுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் நேரடியாகக் கலந்துரையாடி காப்புரிமை மற்றும் இலக்கியப் பரிமாற்றங்களை மேற்கொள்ள ஒரு சிறப்பான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: மழை அப்டேட்! தென் தமிழகத்தில் மழை நீடிக்கும்! சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை மட்டுமே! - வெதர் மேன் தகவல்!
இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி, பொதுமக்கள் பங்கேற்கும் சிறந்த தளமாகவும் அமையும் என்று கூறிய அமைச்சர், இந்தாண்டு மதிப்புறு விருந்தினராகப் பிராங்பர்ட் புத்தகக் காட்சியின் ஒருங்கிணைப்புக் குழு அழைக்கப்பட்டுள்ளது என்ற தலைப்புச் செய்தியை உறுதிப்படுத்தினார். மேலும், இங்குக் கலந்துரையாடல்கள், கண்காட்சிகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதன் பிரதான நோக்கம், தமிழை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதும், உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வருவதும்தான் என்று உறுதிபடத் தெரிவித்தார். மாணவா்கள், வாசகா்கள், எழுத்தாளா்கள் என அனைத்துத் தரப்பினரையும் அன்போடு இந்த இலக்கியப் பரிமாற்றத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் வழக்கமான புத்தகக் காட்சியுடன் இணைந்து, கலைவாணர் அரங்கம் பன்னாட்டுப் பதிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: 4-வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் உடைமைகளை கேட்டு வாக்குவாதம்!