பாட்டாளி மக்கள் கட்சியின் மிக முக்கியப் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜூலை 29-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் பொதுச்செயலாளர் ச. வடிவேல் இராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் வரும் 29.07.2026 அன்று காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் கூட்ட அரங்கத்தில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த முக்கியக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேலும் ஓராண்டு காலத்திற்குத் தொடர்வார் என ஒருமனதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஓராண்டு பதவிக்காலம் தற்பொழுது முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!
இந்தக் கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி இராமதாஸ் மீண்டும் நீட்டிப்பு செய்யப்படுவாரா அல்லது புதிய முடிவுகள் ஏதேனும் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே ஒருவிதமான கருத்து வேறுபாடுகளும், மோதல் போக்கும் நீடித்து வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இருப்பினும், தற்பொழுது இரு தலைவர்களுக்கும் இடையே சுமுகமான சூழல் ஏற்பட்டு, இருவரும் முழுமையாகச் சமரசமாகிவிட்ட நிலையில் இந்தப் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதனால் இந்த முறை பாமகவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் உட்கட்சிப் பதவிகள் குறித்து முக்கிய முடிவுகள் சுமுகமாக எட்டப்படும் எனத் தொண்டர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!