திராவிடர் கழகம் நடத்தவிருந்த நீட் எதிர்ப்புப் பிரச்சாரப் பயணத்திற்குத் தடை விதித்துப் பெரியார் திடலில் காவல்துறையைக் குவித்து முடக்கியுள்ள தவெக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்றும், நீட் விலக்கு விஷயத்தில் தவெகவின் கொள்கை நிலைப்பாடு என்னவென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் அரசியல் இயக்கங்களாலும் சமூக அமைப்புகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த நீட் எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம் என்பது ஏதோ இப்போது திடீரெனத் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்திலும் திமுக ஆட்சிக் காலத்திலும் பலமுறை இத்தகைய பிரச்சாரப் பயணங்கள் எவ்வித தடையுமின்றி நடைபெற்றுள்ளன. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களே தமிழ்நாடு முழுவதும் நேரில் பயணித்துப் பிரச்சாரம் செய்துள்ளார்.

இந்நிலையில், சென்னை பெரியார் திடலில் திட்டமிடப்பட்டிருந்த நீட் எதிர்ப்புப் பிரச்சார நிகழ்வுக்குத் தவெக அரசு காவல்துறை மூலம் திடீரெனத் தடை விதித்துள்ளதோடு, பெரியார் திடல் வளாகத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பைக் குவித்து அனுமதி மறுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!
இச்சம்பவம் குறித்துக் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ள விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நீட் எதிர்ப்பு எப்படி ஒரு கொள்கை முடிவோ, அதேபோலத் தான் தற்போது ஆட்சியில் உள்ள தவெகவுக்கும் நீட் எதிர்ப்பு என்பது கொள்கை முடிவு என்று கூறப்பட்டது. அந்தக் கொள்கையை வலியுறுத்தித் தான் திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்கிறது. அந்தப் பிரச்சாரத்திற்கு அன்றைய முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியும் மு.க.ஸ்டாலினும் அனுமதி அளித்திருந்த நிலையில், இன்று தவெக தலைவர் விஜய் மட்டும் அதைத் தடுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நீட் விலக்கும் நீட் எதிர்ப்பும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் முதன்மையான கொள்கையாகும். அப்படி இருக்கும் போது, அது தவெகவின் கொள்கையா இல்லையா? நீட் எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தடை விதிக்கும் தவெக அரசின் உண்மையான கொள்கை நிலைப்பாடு தான் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துத் தனது காரசாரமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!