தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா’ இன்று மாலை 6 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விழாவைத் தொடங்கி வைத்து சிறப்பிக்க உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டுச் சென்னை மாநகரமே கலைத்திருவிழாவாக மாறும் வகையில், வரும் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையின் முக்கியப் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என மொத்தம் 20 இடங்களில் இக்கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள சுமார் 1,500 நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

இன்று மாலை நடைபெறும் தொடக்க விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்தத் திருவிழாவிற்காகச் சென்னை முழுவதும் உள்ள 20 பொது இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு, மாலை நேரங்களில் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்காகக் கட்டணமின்றி நடத்தப்பட உள்ளன. சுமார் 1,500 கலைஞர்கள் பங்கேற்கும் இந்த சங்கமம் நிகழ்வு, சென்னை வாழ் மக்களுக்கு ஒரு சிறந்த பொங்கல் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளுடன் பாரம்பரிய உணவுத் திருவிழாக்களும் சில இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகரம் வரும் 18-ஆம் தேதி வரை ஒரு மாபெரும் கலாச்சாரச் சங்கமமாகக் காட்சியளிக்கப் போகிறது.
இதையும் படிங்க: தப்பாட்டம் முதல் சிலம்பாட்டம் வரை! பொங்கல் கலைத்திருவிழாவிற்கு தயாராகும் தலைநகரம் - முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!
இதையும் படிங்க: 2026 தேர்தல் களம்! ஜனவரி 20-ல் திமுக மாசெக்கள் கூட்டம்.. துரைமுருகன் அறிவிப்பு!