சென்னை ராயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊழியர்களின் கடும் கவனக்குறைவு காரணமாக இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், மருத்துவமனையின் தடயவியல்துறை மருத்துவருக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை முடிந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலத்தை இறுதிச் சடங்கிற்காகத் திறந்து பார்த்தபோது, அது வேறு பெண்ணின் உடலே என்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பான சூழல் நிலவியது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரியதர்ஷினி (18) மற்றும் அனுஷ்கா (19) ஆகிய இரு சிறுமிகளின் சடலங்கள் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டிருந்தன. பிரேதப் பரிசோதனை முடிவடைந்ததும், ஊழியர்களின் கவனக்குறைவால் பிரியதர்ஷினியின் (18) சடலத்திற்குப் பதிலாக அனுஷ்கா (19) என்பவரின் சடலம் உறவினர்களிடம் மாற்றித் தரப்பட்டது.
இதையும் படிங்க: மக்களே உஷார்..! ஸ்பீக்கரில் போன் பேசினால் நடவடிக்கை? அரசு பேருந்துகளில் புதிய உத்தரவு..!!
சடலத்தைப் பெற்று வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்ய முயன்ற போதுதான், அது பிரியதர்ஷினி இல்லை என்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக
மருத்துவமனைக்குத் திரும்பிய அவர்கள் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனுஷ்காவின் சடலத்தைப் பெற்றுக்கொண்ட ஊழியர்கள், பிரியதர்ஷினியின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
மணலி சிறுமியின் உடல் ஏடூருக்கும், ஏடூர் சிறுமியின் உடல் மணலிக்கும் அனுப்பி வைக்கப்பட்ட விவகாரத்தில், ஒரே வயது இரே மாதிரியான உடல்வாகு இருந்ததால் உடல்கள் மாறியதாக மருத்துவமனை நிர்வாகம் மழுப்பல் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே, சம்பவத்தன்று பணியில் இருந்த தடயவியல் துறை உதவிப் பேராசிரியருக்கு மருத்துவமனை முதல்வர் மெமோ வழங்கியுள்ளார். மேலும் உடல்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி மருத்துவக் கல்வி இயக்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பரபரப்பு... கல்லூரி மாணவர்களுக்கு விரட்டி, விரட்டி அரிவாள் வெட்டு... சக மாணவர்கள் 3 பேர் கைது...!