உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, மக்கள் தொகையை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது.

இந்நிலையில் சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 2024-ல் சரிவை சந்தித்துள்ளது. 2023-ல் 140.9 கோடியாக இருந்த மக்கள் தொகை, 2024-ல் 13.9 லட்சம் குறைந்து 140.8 கோடியாக உள்ளது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம் குழந்தை பிறப்பு விகிதத்தின் தொடர் வீழ்ச்சி மற்றும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. 2024-ல் 95.4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன, இது 2023-ஐ விட சற்று அதிகமாகும். இருப்பினும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 31 கோடியாக உயர்ந்து, மொத்த மக்கள் தொகையில் 22% ஆக உள்ளனர். 2035-ல் இது 30% ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் பெய்த கனமழையால் 34 பேர் பலி.. 80,000 பேர் இடமாற்றம்.. தத்தளிக்கும் மக்கள்..
1979-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கையால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. 2016-ல் இது தளர்த்தப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை அனுமதிக்கப்பட்ட போதிலும், வாழ்க்கை செலவு உயர்வு, இளைஞர்களின் திருமணத்தில் தயக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவுகள் ஆகியவை பிறப்பு விகிதத்தை பாதித்துள்ளன. இதனால், பணியாற்றும் வயதுடையவர்களின் எண்ணிக்கை 200 மில்லியனாக குறையலாம் என எச்சரிக்கப்படுகிறது.

இதை எதிர்கொள்ள, சீன அரசு 2025ம் ஆண்டு ஜனவரி முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 500 டாலர் (தோராயமாக 3,500 யுவான், இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம்) மானியமாக வழங்கப்படும். மேலும், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற தம்பதிகளுக்கு ஒரு லட்சம் யுவான் வழங்கப்படும். திருமண வயதை 18 ஆக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைப் பேறு மானியம், வீட்டு வசதி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வருமான வரி சலுகைகள் உள்ளிட்ட 13 புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை முழுமையாக தடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஐ.நா.வின் கணிப்புப்படி, 2100ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 80 கோடியாகக் குறையலாம். இந்தத் திட்டங்கள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, மக்கள் தொகை சரிவைக் கட்டுப்படுத்த உதவுமா என்பது குறித்து கலவையான கருத்துகள் நிலவுகின்றன.
இதையும் படிங்க: ரூ.4,850 கோடி கடன்.. இந்தியாவுடன் நட்பு பாராட்டும் மாலத்தீவு.! கழட்டி விடப்பட்ட சீனா!!