தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுமத்திய ரூ.1,020 கோடி ஊழல் புகார்கள் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விரிவான விசாரணையைத் தொடங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சி அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள இந்த ஊழல் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறையில் வழங்கப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் (Tenders) முறைகேடு செய்து சுமார் ரூ.1,020 கோடி லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை அனுப்பிய 258 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணையை (Preliminary Inquiry) நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, ஜனவரி 8: அமலாக்கத்துறை தனது அறிக்கையில், நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் இதர கட்டுமான ஒப்பந்தங்களில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இதற்காக வாட்ஸ்அப் உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனை தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளது. குறிப்பாக, ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே யாருக்கு வழங்க வேண்டும் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகவும், இதற்காகப் பெருந்தொகை கைமாறியுள்ளதாகவும் அமலாக்கத்துறை சாடியுள்ளது.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது; "பழிவாங்கும் அரசியலை நிறுத்துங்கள்" ப.சிதம்பரம் காட்டம்!
ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதம் நகராட்சிப் பணி நியமனங்களில் ரூ.888 கோடி ஊழல் நடந்ததாக ஒரு புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது இரண்டாவது மெகா புகாராகப் பார்க்கப்படுகிறது. இந்தப் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமைச்சர் கே.என். நேரு, இது பாஜகவின் தூண்டுதலால் நடத்தப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், சட்டப்படி இதனை எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூதாட்ட செயலி வழக்கு..!! ரூ.7.93 கோடி சொத்துக்கள் முடக்கம்..!! ED விசாரணை வளையத்தில் பிரபலங்கள்..!!