தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்ட ஒரு வார கால பயணத்தை முடித்துவிட்டு, செப்டம்பர் 8 (இன்று) காலை 8.45 மணியளவில் சென்னை திரும்பினார். இந்தப் பயணத்தின் மூலம், தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி மதிப்பிலான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடன் ரூ.7,020 கோடி முதலீடுகளுக்கும், இங்கிலாந்தில் 7 நிறுவனங்களுடன் ரூ.8,496 கோடி முதலீடுகளுக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையும் படிங்க: தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.. காரணம் இதுதான்..!!
இந்தப் பயணம் ‘தமிழ்நாடு வளர்கிறது’ (#TNRising) என்ற கருப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அன்று தொடங்கிய இப்பயணத்தில், அவர் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுடன் ஜெர்மனிக்கு சென்றார். அங்கு ‘டி.என்.ரைசிங்’ மாநாட்டில் பங்கேற்று, 26 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.7,020 கோடி முதலீடு பெற்றார், இதனால் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
மேலும், கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் 2 அன்று லண்டனுக்கு சென்ற ஸ்டாலின், அங்கு இந்தோ-பசிபிக் துணை செயலாளர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து, தமிழ்நாடு-இங்கிலாந்து இடையேயான ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தார். இந்துஜா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேசி, மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்த்தார், இதன் மூலம் 17,613 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து, திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கில் பங்கேற்றார். அம்பேத்கரின் லண்டன் இல்லம், ஜி.யு.போப் கல்லறை, கார்ல் மார்க்ஸ் நினைவிடம் ஆகியவற்றை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செப்டம்பர் 6 அன்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரிய விழாவில் உரையாற்றி, தமிழர்களின் அறிவாற்றல் மற்றும் உழைப்பை பாராட்டினார்.

தனது எக்ஸ் பதிவில், “ஜெர்மனியில் தமிழர்களின் உற்சாக வரவேற்புடன் தொடங்கிய இப்பயணம், லண்டனில் அவர்களின் வாழ்த்துடன் நிறைவுறுகிறது. அளவில்லா அன்பு பொழிந்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி,” என உருக்கமாகத் தெரிவித்தார். இந்த வெளிநாட்டுப் பயணம், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இல.கணேசன் உடல் இன்று நல்லடக்கம்!! நாகாலாந்தில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!!