தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், வரும் மார்ச் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தனது அதிரடித் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் கோட்டையான திருவாரூரில் இருந்து இந்தப் பிரசாரப் பயணம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் விஜய் அவர்கள் இன்று 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து திமுக-வை நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ள சூழலில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்டாலினின் இந்தப் பிரசாரம் அமையவுள்ளது.
அண்ணா அறிவாலயம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை முதல் கட்டமாகப் பின்வரும் மாவட்டங்களில் முதல்வர் பிரசாரம் செய்கிறார்:
இதையும் படிங்க: சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில் 'உதயசூரியன்' சின்னத்தில் களம்!
மார்ச் 31 (செவ்வாய்): திருவாரூரில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுத் தனது தேர்தல் பயணத்தைத் தொடங்குகிறார். அன்று மாலை நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
ஏப்ரல் 1 (புதன்): தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் நடைபெறும் 'உதயசூரியன்' சின்னத்திற்கான பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

ஏப்ரல் 2 (வியாழன்): புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டு, முதற்கட்டப் பயணத்தை நிறைவு செய்கிறார்.
ஸ்டாலின் சார் கூட்டணி ஒட்டுப்போட்ட கூட்டணி என விஜய் விமர்சித்துள்ள நிலையில், தனது பிரசாரத்தின் போது திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகளையும், 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்' வலிமையையும் எடுத்துக்கூறி ஸ்டாலின் வாக்குச் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, பெண்களுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லாப் பேருந்து வசதி மற்றும் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை முக்கியப் பேசுபொருளாக அவர் முன்வைக்க உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக-வின் இந்தத் தொடக்க விழா தேர்தல் களத்தை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!