தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தற்போது இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். குறிப்பாக ஈரான், இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தமிழகம் முழுவதும் நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு தொடர்பாகவும், வணிக சிலிண்டர் எண்ணிக்கை மற்றும் கையிருப்பில் உள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுடைய எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கேஸ் சப்ளை செய்யும் நிறுவனங்களும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், தம்மிடம் கையிருப்பில் உள்ள வணிக மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கான எண்ணிக்கை, அதனைக் கொண்டு எவ்வளவு நாளைக்கு விநியோகிக்க முடியும் உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெற்றுள்ளது.
இதனிடையே, அந்த அறிக்கையின் அடிப்படையில் இன்றைய தினம் முதலமைச்சர் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். அது மட்டுமல்ல ஏற்கனவே இது தொடர்பாக இரண்டு முறை பிரதமர் மோடிக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. உடனடியாக வணிக ரீதியாகவும் அதேபோல மின்சார தட்டுப்பாடு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காகவும் உடன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் ஒன்றை எழுதி இருந்தது. இது தொடர்பாகவும் இன்றைய தினம் ஆய்வுக்கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இளைஞர்களே..!! உழைப்பை மட்டும் கொடுங்கள்.. உயிரை அல்ல..!! முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!!
தமிழகத்தில் நிலவி வரும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இப்போது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை அடியோடு முடக்கிபோட்டுள்ளது.. ஓட்டல்கள் முதல் ஆட்டோ போக்குவரத்து வரை அனைத்தும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் விநியோக கால அளவு திடீரென 28 நாட்களாக உயர்த்தப்பட்டிருப்பது, சாமானிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை ஒரு பெரும் கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. இதனால் மக்கள் கேஸ் ஏஜென்சி அலுவலகங்களை முற்றுகையிடுவது, கேஸ் வாகனங்களை பின் தொடர்வது, கேஸ் குடோன்களை முற்றுகையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் பிரச்சினை..!! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!