தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பேசிய சர்க்காரியா கமிஷன் தொடர்பான குறிப்புகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று தெளிவாக அறிவித்துள்ளார்.
1976ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சர்க்காரியா விசாரணை ஆணையம், அப்போதைய திமுக அரசின் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்தது. அதில் வீராணம் குடிநீர் திட்டத்திற்கான குழாய் தயாரிப்பு டெண்டர் குறித்த பகுதி முக்கியமாக இடம்பெற்றது. சுமார் ₹16 கோடி மதிப்பிலான அந்த டெண்டரை சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்க, கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் 2.5 சதவீத கமிஷன் கோரியதாகவும், அது ₹29 லட்சம் வரை ஏழு தவணைகளில் வழங்கப்பட்டதாகவும் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் கருணாநிதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரை பாதிக்கும் வகையில் டெண்டர் பரிந்துரைகளை மாற்றியமைத்ததாகவும் ஆணையம் முடிவு செய்தது. இந்த விவரங்களை முதலமைச்சர் விஜய் அவைக்குள் எடுத்துரைத்தார். அமலாக்கத்துறை முந்தைய அரசுக்கு அனுப்பிய ஆவணங்களில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் 7.5 முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படாதவை என திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவைக்குள் அமளியும் வெளிநடப்பும் நடைபெற்றன. இன்று அவை தொடங்கியதும் திமுக கொறடா எவ.வேலு, முதலமைச்சர் பேசிய பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார். சபாநாயகர் பிரபாகர் பதிலளிக்கையில், “நேற்று முதலமைச்சர் பேசத் தொடங்கியதிலிருந்து முடியும் வரை திமுக உறுப்பினர்கள் ஒரு நிமிடம் கூட கவனமாகக் கேட்கவில்லை.
அனுமதியின்றி போஸ்டர்களைக் கொண்டு வந்து காட்டினர். முதலமைச்சர் முன்பே சில ஆதாரங்களை என்னிடம் காட்டினார். இவை ஏற்கனவே அவையில் பலமுறை விவாதிக்கப்பட்ட செய்திகளே. மிசாவின் கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது உண்மை. அமலாக்கத்துறை ஆவணங்கள் பொதுத் தளத்தில் உள்ளன. ஒரு துறை கூறியதைக் குறிப்பிடுவதில் தவறில்லை. எனவே நீக்கத் தேவையில்லை” என்றார்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். சுமார் ஐம்பது ஆண்டுகள் பழமையான இந்த அறிக்கை மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: சபாநாயகர் சேரில் தொப்பியுடன்.. இஸ்லாமியர்களுக்கு கிடைத்த மரியாதை!! தவெக முஸ்தபா பெருமிதம்!!