முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி தென் தமிழகத்தின் பசிப்பிணி போக்கிய மாமனிதர் கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்குத் தனது மனமார்ந்த புகழஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திராவிட மாடல் 2.0ல் மகிழ்ச்சி பொங்கல் பன்மடங்காகும்..!! முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து..!!
தேனி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் வாழ்வாதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையை, தனது சொந்தப் பணத்தைச் செலவழித்துக் கட்டியவர் பிரிட்டிஷ் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக். அவரது பிறந்தநாளான இன்று (ஜனவரி 15), தமிழக அரசு சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பென்னிகுவிக் அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் உருக்கமான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது என்ற வள்ளுவர் வாக்கைக் குறிப்பிட்டு, தென் தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் பென்னிகுவிக் அவர்களுக்குத் தனது வணக்கத்தைத் தெரிவித்தார். மேலும், முல்லைப் பெரியாறு அணையினைப் பெருமுயற்சியோடு கட்டி, அப்பகுதி மக்களின் பஞ்சம் - பசி நீக்கிய பென்னிகுவிக் பெருமகனாரின் குடும்பத்தினரைக் கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணத்தின்போது சந்தித்திருந்தேன்; அவரது பிறந்தநாளையொட்டி, இந்த ஆண்டு அவர்களே நம் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள செய்தி கண்டு மகிழ்கிறேன் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். பென்னிகுவிக் குடும்பத்தினர் தற்போது தமிழகம் வந்துள்ள நிலையில், அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வெளிநாட்டுப் பொறியாளரைத் தெய்வமாகப் போற்றி, இன்றும் அவரது பிறந்தநாளைத் தங்கள் வீட்டு விழாவாகத் தென் மாவட்ட மக்கள் கொண்டாடி வருவது தமிழர்களின் நன்றியுணர்வுக்குச் சான்றாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: “வெற்றிச் சங்கமம்.. இது திராவிட சங்கமம்!” சென்னை சங்கமம் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!